தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் முதன் முறையாக அரசின் சார்பில் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இளைஞர் கேட்ட கேள்வியால் மூட் அவுட்டாகி திரும்பி சென்றார். தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடந்து ஒரு வாரம் ஆகியும் அமைச்சர்கள் ஒருவர்கூட தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சை குறித்து அரசின் சார்பில் பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களின் குறைகளைக் கேட்கவும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தொகுதி சார்ந்த நிர்வாகிகள், எம்.பி.க்கள் சென்றால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆனால் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எவ்வித முக்கிய அலுவலும் இல்லாத நேரத்திலும் ஐந்து நாட்கள் கடந்த பின்னரும் தூத்துக்குடி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்ற விமர்சனமும் அனைவராலும் வைக்கப்பட்டது கடைசி கந்தாயமாக அரசின் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடிக்கு சென்றார். மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச்சென்றார். அங்கு அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிகாரிகள் சமாதானப்படுத்தியதன் பேரில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்தார். அப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் தாய் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், “மக்களை முட்டாள் ஆக்காதீர்கள் இங்கு காயம்பட்டு கிடப்பவர்களை பாருங்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் எந்த விளக்கமும் சொல்லாதீர்கள்” என்று தெரிவித்தார். சிகிச்சைப்பெற்று வரும் இளைஞர் ஒருவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உங்களால் உறுதி தரமுடியுமா என்று கேட்டார். அரசின் எண்ணமும் அதுதான் என்று அமைச்சர் கூற அப்படியானால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாட்டார்கள் என்று உங்களால் உறுதி அளிக்க முடியுமா? என்று இளைஞர் கேட்க அளிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார். அப்படியானால் எழுதிக்கொடுங்கள் என்று இளைஞர் கேட்க தனிப்பட்ட முறையில் என்னால் எழுதிக்கொடுக்க முடியாது என்று கூறிய அமைச்சர் மூட் அவுட்டாகி மற்ற நோயாளிகளை பார்க்காமல் அரசு விடுதிக்கு திரும்பி பேட்டி அளித்துவிட்டு சென்றார். கடம்பூர் ராஜூவை கடுப்பேற்றி அனுப்பிய அவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்ராஜ் என்பவரிடம் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். அப்போது சந்தோஷ் ராஜ், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான மக்கள் போராட்டத்த்தின் மீது தமிழக அரசு கையாண்ட அடக்குமுறைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதம் புரிந்தார். அவர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பன்னீர்செல்வமும் அமைச்சர் ஜெய்குமாரும் அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் போலியாக தலையில் கட்டுப்போட்ட அதிமுக கப்சா நோயாளியின் கன்னத்தை தடவி புகைப்படம் எடுத்துக் கொண்டு பன்னீர்செல்வம் மருத்துவமனையை விட்டு வெளியேறினார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை கிளம்பிவிட்டார். சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்றரை மணி நேரம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரம் செலவிட்டார். இதன்பிறகு 10 நிமிடங்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரம் செலவிட்டார் பன்னீர்செல்வம். அங்கு ஒரு ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் பத்து நிமிடங்களிலேயே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விமானத்தில் சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம்.
பகிர்