Chennai: Tamil actor Rajinikanth addresses his fans on the fourth day of a six-day-long photo session in Chennai, on Friday. Rajinikanth is expected to announce his decision to join politics on December 31. PTI Photo by R Senthil Kumar (PTI12_29_2017_000131B)

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்க சென்ற நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு வக்காலத்து வாங்குவதை போலவும் இருப்பதாக கொதிக்கிறார்கள் மக்கள்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, தூத்துக்குடி நகரில் 13 பேர் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், ஒருவாரம் கழித்து இன்று தூத்துக்குடி சென்றிருந்தார் ரஜினிகாந்த்.

மருத்துவமனையில், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் மக்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இதன்பிறகு பேட்டியளித்த ரஜினிகாந்த்தின் பேட்டி, பாஜக மற்றும் தமிழக அரசு என்ன சொல்லி வருகிறதோ அதை அப்படியே எதிரொலிப்பதாக அமைந்தது. போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும், அதனால்தான் உயிர் பலி ஏற்பட்டதாகவும் கூறி போலீசாரின் ‘குறி பார்த்து நடத்தப்பட்ட’ துப்பாக்கி சூட்டை கூட நியாயம் என ஸ்தாபிக்க முயன்றார் ரஜினிகாந்த். ஏற்கனவே இதை பாஜக தலைவர்களும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் கூறி வந்த நிலையில், ரஜினிகாந்த்தும் அதையே கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டது மக்கள்தான் என்பதை அவரே மருத்துவமனையில் நேரடியாக பார்த்த பிறகும்கூட, ஏற்கனவே எழுதி வைத்த டயலாக் போல ஒன்றை கூற வேண்டிய பின்புலம் என்ன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது? இவர் அரசின் வாய்ஸ்சாகத்தான் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தை இது அதிகரிக்கிறது.

தூத்துக்குடி சம்பவம் பற்றி ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கை வெளியாகும் முன்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி போராட்டத்தில் விஷமிகள் ஈடுபட்டதாக கூறிவிட்டார். இது தவறான செயல் என்பது எதிர்க்கட்சிகள் விமர்சனம். முதல்வராவது பரவாயில்லை, உளவுத்துறையை கையில் வைத்திருப்பவர். ரஜினிகாந்த் இவ்வாறு கூற காரணம் என்ன? எந்த ஒரு ஊடகமும் கூட போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கொண்டதாக செய்தி வெளியிடாத நிலையில், ரஜினியே நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களையும் பார்த்த பிறகும் கூட, போராட்டத்தில் சமூக விரோதிகள் இறங்கியதாக கூறியது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? ரஜினிக்கு மட்டும் என்ன ஆதாரம் கிடைத்தது? இதை விசாரணை கமிஷனிடம் ரஜினிகாந்த் ஏன் சமர்ப்பிக்கவில்லை?

போராட்டம் நடத்தினால் தொழில் தொடங்க யாரும் வரமாட்டார்கள் என்று ஒரு கருத்தையும் போகிற போக்கில் சொல்கிறார் ரஜினிகாந்த். இது கடந்த ஒரு வாரமாக பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வரும் விஷம பிரச்சாரம். அதை அப்படியே தனது வாயால் சொல்லியுள்ளார் ரஜினி. பசியும், பட்டினியுமாக தங்கள் வாழ்வாதாரத்தையும், சந்ததிகளையும் காக்க போராட்டம் நடத்துவோரையெல்லாம் பார்த்தால், இவர்களுக்கு இளக்காரமாக தெரிகிறது என்பதை தவிர இது வேறு என்ன? திருப்பூரிலும், கோவையிலும், ராணிப்பேட்டையிலும், சென்னையிலும், சிவகாசியிலும் எத்தனையோ தொழில்கள் இயங்குகின்றன. மக்கள் அத்தனை தொழிலுக்கும் எதிராகவா போராடுகிறார்கள்? சுற்றுச்சூழலால் தாங்கள் பாதிக்கப்படுவதாக 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கூக்குரல் எழுப்பியும், அரசுகளின் காதுகளில் விழாத பிறகுதான் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியுள்ளார்கள். இந்த வரலாறு ரஜினிக்கு தெரியுமா?

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். இது ஆளும் கட்சி கூற வேண்டிய வார்த்தை. இவர் ஏன் கூறுகிறார்? எல்லாவற்றுக்கும் ராஜினாமா செய் என்றால் என்ன செய்வது என கேட்டுள்ளார் ரஜினி. 13 பேர் அரசின் காவல்துறையால் சுட்டு இறந்தது என்பதை “எல்லாவற்றுக்கும்” என்று எளிமைப்படுத்துகிறார் இவர். இவரது கூற்றுப்படி இதெல்லாம் சாதாரண நிகழ்வு போலும். ஒருவேளை ரஜினிகாந்த் முதல்வராக வந்தால், அப்பாவி உயிர்கள் பற்றிய இவரது இந்த பார்வை அப்போது இன்னும் உக்கிரமாகுமே என நினைக்கும்போதே தமிழக மக்களுக்கு பதைபதைப்பு ஏற்படுகிறது.

ஆள்வோர்கள் தூத்துக்குடிக்குள் வந்து திரும்பியபோதெல்லாம் முகத்தில் அருள் இல்லை. காரணம், மக்கள் அவர்களிடம் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் அப்படியான ஆணித்தரமான கேள்விகள். எனவே மக்களை சமாதானப்படுத்த அரசின் தூதுவராக, ஊதுகுழலாக உள்ளே வந்துள்ளார் ரஜினிகாந்த் என்று குமுறுகிறார்கள் தூத்துக்குடி மக்கள். ஒருவேளை இந்த பேட்டியை முதலிலேயே கொடுத்துவிட்டு பிறகு வந்திருந்தால் மருத்துவமனைக்குள்ளேயே அவரை விட்டிருக்க மாட்டோம் என்கிறார்கள், போலீசாரால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு சிகிச்சை பெறும் அப்பாவிகளின் உறவினர்கள்.

பகிர்