தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், சமூக விரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றும் தொடர்ந்து போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் ஆவேசமாக பதிலளித்தார். ரஜினிகாந்தின் கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்று கட்டுரை வெளியாகியுள்ளது. நமது அம்மா நாளிதழில் காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: “தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான். பிரச்சினைக்கு ராஜினாமா முடிவல்ல என ரஜினி கூறியது பதவி ஆசை உள்ள தலைவர்களுக்கு சரியான பாடம். வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குழப்பமில்லாமல் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ரஜினியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினியின் பேச்சு குறித்து அவர் பேசியதாவது, ரஜினிகாந்தின் பேச்சு குழப்பமில்லாமல் மிக தெளிவாக குருமுட்டை குருமூர்த்தி சொல்லிக்கொடுத்தபடி உள்ளது. னைத்து விஷயங்களிலும் குழப்பமில்லாமல் ரஜினி பேசியுள்ளார். அமைதியாக நடந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால் வன்முறை வெடித்தது. இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார். அமமுக தலைவர் ‘குக்கர்’ தினகரன் கூறுகையில்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மற்றும் ஜல்லிக்கட்டு வேண்டி நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக ரஜினிகாந்த் சொல்வது தவறு. போலீஸார் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. எல்லா துறைகளிலும் கருப்பு ஆடுகள் உள்ளன” என்று குற்றம் சாட்டினார். ஏற்கனவே பன்னீரை தூத்துக்குடிக்கு அனுப்பிவிட்டு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில் தீவிரவாதிகள் ஊடுருவலால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று சப்பைக்கட்டு கட்டியதை முன்மொழிதுவபோல் ரஜினியின் பேச்சு உள்ளதாக மக்கள் கொந்தளிக்கிறார்கள். பாஜக மற்றும் தமிழக அரசு என்ன சொல்லி வருகிறதோ அதை அப்படியே எதிரொலிப்பதாக அமைந்தது. போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும், அதனால்தான் உயிர் பலி ஏற்பட்டதாகவும் கூறி போலீசாரின் ‘குறி பார்த்து நடத்தப்பட்ட’ துப்பாக்கி சூட்டை கூட நியாயம் என ஸ்தாபிக்க முயன்றார் ரஜினிகாந்த். ஏற்கனவே இதை பாஜக தலைவர்களும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் கூறி வந்த நிலையில், ரஜினிகாந்த்தும் அதையே கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டது மக்கள்தான் என்பதை அவரே மருத்துவமனையில் நேரடியாக பார்த்த பிறகும்கூட, ஏற்கனவே எழுதி வைத்த டயலாக் போல ஒன்றை கூற வேண்டிய பின்புலம் என்ன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது? இவர் அரசின் வாய்ஸ்சாகத்தான் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தை இது அதிகரிக்கிறது. போராட்டம் நடத்தினால் தொழில் தொடங்க யாரும் வரமாட்டார்கள் என்று ஒரு கருத்தையும் போகிற போக்கில் சொல்கிறார் ரஜினிகாந்த். இது கடந்த ஒரு வாரமாக பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வரும் விஷம பிரச்சாரம். அதை அப்படியே தனது வாயால் சொல்லியுள்ளார் ரஜினி. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். இது ஆளும் கட்சி கூற வேண்டிய வார்த்தை. இவர் ஏன் கூறுகிறார்? எல்லாவற்றுக்கும் ராஜினாமா செய் என்றால் என்ன செய்வது என கேட்டுள்ளார் ரஜினி. 13 பேர் அரசின் காவல்துறையால் சுட்டு இறந்தது என்பதை “எல்லாவற்றுக்கும்” என்று எளிமைப்படுத்துகிறார் இவர். இவரது கூற்றுப்படி இதெல்லாம் சாதாரண நிகழ்வு போலும். ஒருவேளை ரஜினிகாந்த் முதல்வராக வந்தால், அப்பாவி உயிர்கள் பற்றிய இவரது இந்த பார்வை அப்போது இன்னும் உக்கிரமாகுமே என நினைக்கும்போதே தமிழக மக்களுக்கு பதைபதைப்பு ஏற்படுகிறது. மக்களை சமாதானப்படுத்த அரசின் தூதுவராக, ஊதுகுழலாக உள்ளே வந்துள்ளார் ரஜினிகாந்த் என்று குமுறுகிறார்கள் தூத்துக்குடி மக்கள். ஒருவேளை இந்த பேட்டியை முதலிலேயே கொடுத்துவிட்டு பிறகு வந்திருந்தால் மருத்துவமனைக்குள்ளேயே அவரை விட்டிருக்க மாட்டோம் என்கிறார்கள், போலீசாரால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு சிகிச்சை பெறும் அப்பாவிகளின் உறவினர்கள். துப்பாக்கிச்சூட்டை ரஜினி நியாயப்படுத்துகிறார் என்றும் மக்கள் கூறுகிறார்கள். ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்துள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.