சென்னை : திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டசபை நடக்கும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி ஒவ்வொரு துறைகளுக்கும் தனித் தனியே நிதி ஒதுக்க வேண்டி சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக கட்சியினர் தாக்கல் செய்தனர். அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் உரை முடிந்ததும் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

ஸ்டாலின் உரையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபையில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்த இருப்பதாக திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் போட்டி சட்டசபை கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கோபால புரத்தில் இருந்து வரும் நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

பகிர்