கர்நாடக மாநிலத்தில் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார். கர்நாடகத்தில் பிறந்தவரான ரஜினிகாந்த் அந்த மாநில மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதற்குக் கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதுமட்டுமல்லாமல், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாக உள்ள ‘காலா’ திரைப்படத்தையும் கர்நாடகத்தில் எந்த திரையங்குகளிலும் வெளியிட விடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்தனர். அதேபோல, கன்னட திரைப்பட வர்த்தக சபை(கேஎப்சிசி) அமைப்பும் கலா திரைப்படத்தை வாங்கமாட்டோம், யாருக்கும் வினியோகிக்க மாட்டோம் எனத் தெரிவித்தது.

இதனால், வரும் 7-ம்தேதி கர்நாடகத்தில் காலா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் காலா திரைப்படத்தைத் தடையின்றி மாநிலத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துஇருந்தனர்.

அந்த மனுவில் திரைப்படவியல் சட்டம் 1952-, பி பிரிவின் கீழ் மத்திய திரைப்பட தணிக்கைப் பிரிவு(சிபிஎப்சி) காலா திரைப்படம் ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளது. அனைத்து விதமான விதிமுறைகளையும் நாங்கள் பின்பற்றியதால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பெற்றபின், இந்தத் திரைப்படத்தை வெளியிடுவது என்பது மனுதாரரின் அடிப்படை உரிமையாகும்.

ஆதலால், ‘காலா’ திரைப்படத்தை கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய எந்தவிதமான தடையும் இல்லாமல் திரையரங்குக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், படவினியோகிஸ்தர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை கர்நாடகத்தில் காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம், படத்தை வினியோகிக்கவும்மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி கேஎப்சிசி தலைவர் சா ரா கோவிந்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். பல கன்னட அமைப்புகளும், காலா திரைப்படத்தை ரீலீஸ் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, முதல்வர் எச்டி குமாரசாமியிடம் மனு அளித்துள்ளன.

ஆதலால், இந்தத் திரைப்படத்தை மாநிலத்தில் எந்தவிதமான சிக்கலின்றி வெளியிட கர்நாட அரசுக்கும், கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் காலா திரைப்படத்துக்கு தடை விதிக்கும் விஷயத்துக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. காலா திரைப்படம் எந்தெந்த தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன என்ற பட்டியலை மனுதாரர் அளிக்க வேண்டும். அந்தந்த திரையரங்களுக்கு மாநிலஅரசு போதிய போலீஸ் பாதுகாப்பை அளித்து காலா திரைப்படம் தடையின்றி திரையிட வழி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகிர்