சென்னை: காலா.. ரஜினிகாந்த் படமா? ரஞ்சித்தின் படமா? என விவாதங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ரஞ்சித்தின் காலா என கொண்டாடும் தரப்பு ரஜினிகாந்தின் அரசியல் முகம் வேறு என்பதால் காலா கேரக்டர் அவருக்கு ஒத்துப் போகாமல் போவது இயல்புதானே என்கிறது. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் புதிய விவாத களத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்கு முன்னர் வேதம் புதிது, அமைதிப்படை போன்ற படங்கள் சமூக அரசியல் சார்ந்த விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன.
காலா திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது. காலாவை கொண்டாடும் தரப்பு இப்படியாக பேசுகிறது… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
காலாவின் எச்சரிக்கை “கடந்த கால்நூற்றாண்டு காலம் விடுதலைச்சிறுத்தைகள் பேசி வந்த மண்ணுரிமை அரசியலை முழுக்க முழுக்க ரஜினியை வைத்து பேசி இருக்கிறார் இயக்குநர். மண்ணின் மைந்தர்களான தலித்துகள் நிலமற்றவர்களாக- பொறம்போக்காக மாற்றிய அதிகார வர்க்கத்தை திருப்பி அடிக்கும் கதைக்களம். மீண்டும் ராமன்- ராவண யுத்தம். இந்த யுத்தத்தில் ராமன் கொல்லப்படுகிறான். ராவணன் வெற்றி பெறுகிறான். தலித்துகள் வெற்றி பெறுகிறார்கள். சேரி வாழ்மக்களின் குடியிருப்புகளை அகற்றும் இந்துத்துவக்கும்பலுக்கு எதிராக போராடும் சேரி மக்களின் வீரஞ்செரிந்த போராட்டக்களமாக தகிக்கிறது தாராவி. தலித்துகளை- பவுத்தர்களை இந்துத்துவம் எப்படியெல்லாம் நயவஞ்சகமாக அழிக்கத்துடிக்கிறது என்பதை ‘காலா’ அம்பலப்படுத்திகிறது. மோடியின் ‘தூய்மை இந்தியா’ இப்படித்தான் இருக்கும்… அவ்வளவு நயவஞ்சகமாக இருக்கும்… சேரிக்குருதி வழியத்தான் ‘தூய்மை இந்தியா’ இருக்கும் என்பதை ‘காலா’ எச்சரித்துள்ளது.
முழுக்க முழுக்க தலித்களின் விடுதலை அரசியலை பேசுகிறது காலா… படத்தின் இறுதிக்காட்சி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, போலீசே கலவரம் பண்ணுவது என்று தூத்துக்குடி நினைவுக்கு வருகிறது… இன்று ரஜினி பேசும் அரசியலுக்கு நேர் எதிரானது இந்த ‘காலா’! தலித் வாழ்வியலை, தலித் அரசியலை துணிச்சலாக எடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்… தலித்துகளின் விடுதலை அரசியலை முன்னெடுத்து போராடி வரும் விடுதலைச்சிறுத்தைகளின் அரசியல் ஒரு படமாக வந்துள்ளது… இன்னும் இது போல படைப்புகளை படைக்க இன்னும் பல இயக்குநர்கள் வரவேண்டும்!”. இப்படி காலாவை ஒருதரப்பு கொண்டாடுகிறது.
அதே நேரத்தில் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், காலா – திரைப்படம் முழுக்க முழுக்க தலித் அரசியலை பேசுவதாக வன்னி அரசு பதிவு செய்துள்ளார், வி. சி. கட்சியின் ஒரு படம் என்று கூறியுள்ளார். ரஜினி என்ற நடிகரிடமிருந்து தலித் அரசியலைத் தனித்துப் பிரித்துப் பார்க்கும் பார்வை எத்தனை மக்களுக்கு வரும்? திரைப்படங்களில் ஒரு நல்ல பாடலைக் கேட்கிற போது அதைப்பாடிய -அல்லது பாட வாயசைத்த அந்த நடிகனே நினைவுக்கு வருவான். பாடல் கருத்து, எழுதியவர், பாடியவர்- எல்லாம் குப்பைக்குப் போய்விடும். இங்கு நடிக பிம்பம் தான் முதலில். மற்றதெல்லாம் கல்லில் அரிசி பொறுக்குகிற வேலைதான் என விமர்சித்திருக்கிறார்
இப்படியாக படு சீரியசாக விவாத களத்துக்கு வித்திட்டிருக்கும் ஒரு தத்துவார்த்த அரசியல் முகம் ரஜினிக்கு பொருந்தாமல் போனதுதான் படத்தின் நெகட்டிவ் ரிசல்ட்டாக வெளிவருகிறது. ஏனெனில் ரஜினிகாந்த் நிஜவாழ்வில் ரஞ்சித் முன்வைக்கும் அத்தனை அரசியலுக்கும் அப்பட்டமாக நேர் எதிரானவர்; அல்லது அந்த அரசியலின் அடிப்படையையே புரிந்து கொள்ள இயலாதவர். அவர் ஆளும் வர்க்கம் சார்ந்த சிந்தனைகளைக் கொண்டவராக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார். மண்ணின் உணர்வுகளை மக்களின் வேதனைகளை சற்றும் உணராதவராக தமிழ் மண்ணில் இருந்து அந்நியப்பட்டவராக வெளிப்படுத்திக் கொண்டார் ரஜினி. அதனால்தான் கொண்டாடப்பட வேண்டிய ரஞ்சித்தின் திரைகாவியத்தில் ரஜினி ஒட்டாதவராகவே நிற்கிறார். காலாவை கொண்டாடும் ரஜினிகாந்த் தரப்பும் கூட, இந்த படம் வெளியே வந்த பின்னர்தான் ரஜினிகாந்த் தூத்துக்குடி போயிருக்கனும் என அங்கலாய்த்து பேசுவதில் இருந்தே உண்மை வெளிப்படுகிறது. ரஜினியின் ஆன்மீக அரசியல்தான் அவரது நிஜமுகம் என்பதை தமிழ் ரசிகர்கள் புரிந்து கொண்டனர். அதேநேரத்தில் காலா விடுதலை கோரும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதால்தான் இன்னமும் தமிழ்நாட்டு திரையரங்குக