ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ், அடுத்த வருடத்துக்குத் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில், 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. கடந்த வருட தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் இந்த வருடம் ஜனவரி 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என மாற்றப்பட்டது. ஆனால், அப்படியும் கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு ரஜினி நடித்த ‘காலா’வை ஏப்ரலில் ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர்.

அதன்படி, ஏப்ரல் 27-ம் தேதி ‘காலா’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால், கடந்த 7-ம் தேதி தான் ‘காலா’ ரிலீஸானது.

எனவே, இந்த வருட தீபாவளிக்கு எப்படியாவது ‘2.0’ ரிலீஸாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். ஆனால், தற்போதைய நிலைப்படி இந்த வருடம் ரிலீஸாவது சந்தேகம்தான். கிராபிக்ஸ் வேலைகள் நினைத்தபடி முடியாததால், அடுத்த வருட ஜனவரியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.

பகிர்