வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தனது 93-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வாஜ்பாய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் வாய்பாயை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (செவ்வாய்க்கிழமை) எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார். அங்கு வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதாவிடம் அவரது உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அவர் சிகிச்சை பெறும் அறைக்குள் இருந்த அவரது வளர்ப்பு மகள் நமீதாவிடம் கவலையுடன் விசாரித்தேன்.

மூச்சு விடுவதில் சிரமம், சிறுநீர் கழிக்கும் பாதையில் இடையூறு ஏற்பட்டதால், முன் எச்சரிக்கையாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக வாஜ்பாய் வளர்ப்பு மகள் தெரிவித்தார். அதனால் கவலைப்படத் தேவை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக கூறினார்.

அடல் பிகாரி வாஜ்பாய் மதச்சார்பின்மையைக் கட்டிக் காத்தார். எதிர்க்கட்சிகளை மதித்து ஜனநாயகத்தைப் பாதுகாத்தார். என் வேண்டுகோளை ஏற்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முடிவை மாற்றிக்கொண்டார். ஈழத்தமிழர்களுக்கு அவர் செய்த உதவிகளை நான் என்றைக்கும் மறக்க முடியாது.

வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார்; வாஜ்பாயின் உடல் நலம் குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர் முழுமையான நலம் பெற வேண்டும்” என வைகோ தெரிவித்தார்.

பகிர்