தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீக்கப்பட்டது செல்லும் செல்லாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்கிறது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அதிமுகவின் ஆட்சி கவிழும் நிலைக்கு கொண்டுச் சென்றது. ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டு முதல்வர் ஆகலாம் என்ற சசிகலாவின் முதல்வர் கனவு சிறைத்தண்டனையால் தடைபட எடப்பாடி முதல்வரானார்.

எந்த ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடியை கொண்டு வந்தார்களோ தனி ராஜ்யம் வந்தவுடன் இனி டெல்லி தயவு போதும் என முடிவு கட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தனர். டிடிவி ஓரங்கட்டப்பட்டார். இணைந்த கைகள் பல்வேறு முடிவுகளை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் எடுத்தனர்.

டிடிவிக்கு ஆதரவானவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளிக்க அதில் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற மீதமுள்ள 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கொறடா கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சட்டப்பேரவை தலைவர் தனபால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 எம்எல்ஏ-க்களின் தொகுதியை காலியாக இருப்பதாக அறிவித்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் அம்மாநில உயர் நீதிமன்ற தீர்ப்பு போல் அளிக்கப்படும் என மாநில அரசும், எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்டது போல் தீர்ப்பு வரும் என டிடிவி தரப்பும் வாதம் வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் எழுத்துபூர்வமான இறுதி வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு இன்று மதியம் 1 மணிக்கு வழங்குவதாக நேற்று பட்டியலிடப்பட்டது. மொத்தம் உள்ள வழக்குகளில் 7 வதாக பட்டியலிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சரியாக 1-39-க்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 6 நிமிடங்களில் தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது.

இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வாசிக்கும் நிலையில் முதலில் நீதிபதி சுந்தர் தீர்ப்பை வாசித்தார். அவரது தீர்ப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தார். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பகிர்