சேலம் 8 வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து, தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.  இத்திட்டத்தை எதிர்த்து பேசுபவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.  இரு நாட்களுக்கு முன், நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டார்.  நேற்று சுற்றுச் சூழலியல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார். இன்று மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும், சட்டப்பேரவையில் இத்திட்டத்துக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இவ்வாறு பேசினார்

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

வருங்காலத்தில் இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் அகலப்படுத்தினால், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் 15 மீட்டர், அதாவது 30 மீட்டர் அகலத்திற்கு கையகப்படுத்த வேண்டும். இதற்கென மொத்தம் சுமார் 2,200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தும் போது அந்நிலங்களில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியிருக்கும்.

ஆனால், இந்த பசுமை விரைவுச்சாலை அமைக்க சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும். இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். இப்புதிய சாலையினால், கிட்டத்தட்ட 300 ஹெக்டேர் நிலம் குறைவாக கையகப்படுத்தப்பட வேண்டும். இச்சாலையின் மொத்த நீளமான 277.30 கிலோமீட்டரில், 9.955 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை மட்டுமே, செங்கல்பட்டு, ஆரணி, போளூர், செங்கம் மற்றும் அரூர் ஆகிய வனப்பகுதியில் செல்கிறது. அதாவது, கையகப்படுத்த தேவையான 1,900 ஹெக்டேரில், 49 ஹெக்டேர் மட்டுமே வன நிலத்திற்குள் அடங்கும். இச்சாலை அமைக்க 70 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும். இது, வனப்பகுதியில் செல்லும்போது, அதன் அகலம் 45 முதல் 50 மீட்டர் ஆக குறைக்கப்படும்.

இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், இத்திட்டத்தினால் காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி, சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் மற்றும் சில இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த பசுமை வழி விரைவுச் சாலையின் நேர்பாடு, குறைவான வனப்பகுதியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு எடுக்கப்படும் வன நிலத்திற்கு ஈடாக, இரு மடங்கு அரசு புறம்போக்கு நிலம், மாவட்ட நிர்வாகத்தினரால் நில மாற்றம் செய்து, வனத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 2 மடங்காக காடு வளர்க்கப்படும்.

சென்னை முதல் சேலம் வரையிலான இச்சாலை 10 கிலோமீட்டர் நீளத்திற்கு குறைவாகவே வனப்பகுதியில் செல்கிறது. அவற்றில், சேலம் புறவழிச்சாலை அமைப்பதற்காக சுமார் 3.1 கிலோமீட்டர் நீளம் வனப்பகுதியில் இச்சாலை செல்கிறது. இவ்வனப்பகுதியில் உள்ள மலைக்குள், வனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மலைக்குள் சுரங்கப்பாதையாக அமைப்பது வனத்தை பாதுகாக்கும் சிறந்த முறையாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

மேலும், இந்த விரைவுச் சாலையானது சரணாலயம், தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவாகவே அமைக்கப்படுகிறது. எனவே வன விலங்குகளுக்கும் எவ்வித இடையூறோ, பாதிப்போ ஏற்படாத வண்ணம் இந்த பசுமைவழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த பசுமைவழி வரைவுச் சாலை அமைப்பதினால், குறைவான மரங்களே வெட்டப்பட உள்ளன. எனினும், இந்த விரைவுச் சாலை இருமருங்கிலும் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-ன் படி கையகப்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் புதிய நில எடுப்பு சட்டத்தின்படியும் அந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இச்சட்டத்தின்படி அடிப்படை சந்தை மதிப்பில் நகர்ப்புறங்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கும், கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் இரண்டரை மடங்கிலிருந்து 4 மடங்கு வரை இழப்பீடாக வழங்கப்படும். கையகப்படுத்தப்படும் நிலத்திலுள்ள மரங்கள், கட்டிடங்கள் மற்றும் கிணறு ஆகியவற்றிற்கும் தனியே உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும், கட்டிடங்களுக்கு தேய்மான மதிப்பு ஏதும் கணக்கிடப்படாமல் தனியே இழப்பீடு வழங்கப்படும்.

பசுமைவழி விரைவுச் சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் -குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும்”.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்  தங்க நாற்கர சாலைகள் அமைத்திடும் திட்டத்தைப் போலவே, இந்தத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று கடந்த 25 அக்டோபர் 2017ல் அறிவிக்கப்பட்டது.   ஆனால் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சேலம் 8 வழிச் சாலை இல்லை.

அதன் பின், 25 பிப்ரவரி 2018ல்தான் முதன் முறையாக சேலம் 8 வழிச் சாலை குறித்தே கடிதம் எழுதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.   25 பிப்ரவரி 2018 அன்று, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதிய கடிதத்தில்தான் இத்திட்டம் குறித்து, பேசப்படுகிறது.  அந்தக் கடிதத்தில் சேலம் 8 வழிச் சாலை தேவை என்பதை கூறும், எடப்பாடி பழனிச்சாமி, இவ்வாறு எழுதுகிறார்.

Considering the high traffic potential and importance of Salem City, I would like to suggest that a Green Express Way Corridor between Salem and Chennai cities be formed, that will substantially reduce the distance and save fuel. Such a new Expressway will boost the socio-economic status of the State in a big way.  Moreover, the new stretch will mostly involve dry lands, wherein the cost of land acquisition may not be very high, when compared to the benefits.

அதாவது, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வளவு நிலம் தேவை, அதில் எவ்வளவு அரசு நிலம், எவ்வளவு தனியார் நிலம், எந்த அளவு வனப்பகுதியில் வருகிறது என்பது குறித்து இந்த கடிதத்தை எழுதுகையில் எந்த ஆய்வும் செய்யப்படவில்லை. இதற்கான செலவு எவ்வளவு பிடிக்கும் என்பதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது.  இந்த கடிதத்தில் குத்துமதிப்பாக “நிலம் கையகப்படுத்த செலவு அதிகம் ஆகாது” என்றே குறிப்பிடுகிறார்.

இத்திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய அரசு எப்போது அளிக்கிறது தெரியுமா ?

எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பிய மறு நாள்.  அதாவது 26 பிப்ரவரி 2018. இணைப்பு

8 வழிச்சாலை அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு.

அரசு அலுவலகங்களில் கடிதங்கள் ஒரு அதிகாரியை சென்று அடைவதற்கே இரு நாட்கள் ஆகும்.   அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திட்டத்தை படித்துப் பார்த்து, ஆய்வு செய்து, அதற்கான நிதி ஒதுக்கீடெல்லாம் செய்வதற்கு, மாதக் கணக்கில் ஆகும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், இயற்கை பேரழிவு நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசின் நிதி உதவி உடனடியாக செய்யப்படுவதில்லை.   மத்திய அரசின் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழு வந்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி, அதன் மீது மத்திய அரசு முடிவெடுத்த பிறகே, நிதி ஒதுக்கப்படும்.

ஆனால் இந்த விவகாரத்தில் பார்த்தீர்கள் என்றால், 25.02.2018 அன்று கடிதம். 26.02.2018 அன்று அறிவிப்பு.  இது எப்படி சாத்தியம் ?

அடுத்ததாக, இத்திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி இந்த பசுமை விரைவுச்சாலை அமைக்க சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும். இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். என்று கூறுகிறார்.

இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை அளவிடுவதற்காக, குருக்ராமைச் சேர்ந்த  Feedback Infra Private limited, Gurugram என்ற நிறுவனம் பணிக்கப்பட்டிருந்தது.    அந்நிறுவனம் தனது அறிக்கையில், இத்திட்டத்துக்காக 2560 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எதற்காக எடப்பாடி பழனிச்சாமி வெறும் 1900 ஏக்கர் நிலம்தான் தேவைப்படுகிறது என்று ஒரு பச்சைப் பொய்யை கூறுகிறார் ?

அடுத்து, எடப்பாடி “இச்சாலையின் மொத்த நீளமான 277.30 கிலோமீட்டரில், 9.955 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை மட்டுமேசெங்கல்பட்டுஆரணி,போளூர்செங்கம் மற்றும் அரூர் ஆகிய வனப்பகுதியில் செல்கிறது. அதாவதுகையகப்படுத்த தேவையான 1,900 ஹெக்டேரில், 49 ஹெக்டேர் மட்டுமே வன நிலத்திற்குள் அடங்கும்“ என்று சட்டப்பேரவையில் கூறினார்.

ஆனால் ஆய்வறிக்கையில், 120 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் கையகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், எந்தெந்த இடங்களில் வன நிலம் கையகப்படுத்தப்படும் என்பதும் தெளிவாக பட்டியலிடப்பட்டுள்ளது.  எதற்காக இப்படியொரு பச்சைப் பொய்யை கூறுகிறார் எடப்பாடி ?

தற்போது உள்ள இரு தேசிய நெடுஞ்சாலைகளை ஏன் விரிவுபடுத்தாமல் புதிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்கு இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் அகலப்படுத்தினால், “ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் 15 மீட்டர்அதாவது 30 மீட்டர் அகலத்திற்கு கையகப்படுத்த வேண்டும். இதற்கென மொத்தம் சுமார் 2,200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.” என்று கூறினார்.

சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கான ஆய்வறிக்கையின்படி, இதற்காக தேவைப்படும் நிலம், 120 ஹெக்டேர் வன நிலம் உட்பட, 2560 ஹெக்டேர் தேவைப்படும் என்று கூறுகிறதே.   தற்போது உள்ள, சென்னை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தயக்கம் ?   ஏன் இப்படி கூசாமல் பொய் கூறுகிறார் ?

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், இத்தனை ஆயிரம் ஏக்கர்களை கையப்படுத்தும், பல ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்யப்படும் ஒரு திட்டத்தில், இத்தனை அவசரம் ஏன் என்பதுதான் புரியவில்லை.  பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.  இதனால் மக்களுக்கு அச்சம் ஏற்படுவது இயற்கை.  ஆனால் மக்களின் எந்த சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய அரசு துளி கூட முயற்சி செய்யவில்லை.

அராஜகமாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் ஏன்  எடப்பாடி பழனிச்சாமி இத்தனை முனைப்பு காட்டுகிறார் என்பது மர்மமாக உள்ளது.

தொழில் வளர்ச்சியை உருவாக்கக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை சுற்றுச் சூழலை காரணமாக காட்டித்தான் நிறுத்தினார்கள். இப்போது 120க்கும் மேற்பட்ட வன நிலங்களை கையகப்படுத்தும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இத்தனை முனைப்பு ஏன் ?

மேலும், இத்திட்டத்தை எதிர்த்து பேசுவோரையெல்லாம் ஏன் அரசு இப்படி  கைது செய்கிறது ?   திட்டத்தை எதிர்ப்பவர்கள் அத்தனை பேரும் தீவிரவாதிகளா என்ன ?

வன்முறையை தூண்டுவதையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா போன்றோரை கைது செய்யாமல், பாதுகாப்பு அளிக்கும் இதே காவல்துறைதான், சேலம் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அத்தனை பேரையும் கைது செய்து வருகிறது.

திமுக சார்பில், வரும் 23 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை திமுக அறிவித்துள்ளது” என்று கூறினார்.

தொழில் வளர்ச்சி தேவையில்லை, உட்கட்டமைப்பு தேவையில்லை என்று கூறுவது அறிவீனம்.  தொழில் வளம் பெருகினால்தான் மாநிலம் முன்னேறும்.

ஆனால், தற்போது சேலம் செல்வதற்கான வழியாக உள்ள, சென்னை-உளுந்தூர்பேட்டை மற்றும் சென்னை-கிருஷ்ணகிரி சாலைகளை அகலப்படுத்துவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன பிரச்சினை ?  ஏன் புதிதாக ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் ?

மலைகளை குடைந்து, 120 ஹெக்டேர் வனத்தை அழித்து வனவிலங்குகளை விரட்டி, இயற்கையை பாழடித்து, விளைநிலங்களை அழித்து, மாந்தோப்புகளை தரைமட்டமாக்கி, 10,000 கோடி செலவில் புதிய சாலை அமைத்து என்ன சாதிக்கப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி ?

காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், “சொந்த நாட்டு மக்களை சுட்டுக் கொன்ற பாவமே தீராத நிலையில் அடுத்த அவலத்திற்கு காவல்துறையை தயாரபடுத்துகிறது தமிழக அரசு .

பசுமை வழி சாலையை ரத்ததை சிந்தி அமைக்க தேவையில்லை. திட்டம் குறித்து முழுமையாக விளக்காமல் மக்கள் குழம்பியுள்ள சூழல் அவர்களை தவறான வழிக்கு இட்டு செல்லும் .

லத்தியையும், துப்பாகலகியும் காட்டி மக்களை ஒடுக்க முடியாது. காவல்துறைக்கு இது கடினமான காலம்.” என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி தனது பினாமி பெயரிலும் சம்பந்தி பெயரிலும் நெடுஞ்சாலை கான்ட்ராக்டுகளை எடுத்து, கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டபோது, வெட்கமேயில்லாமல் “ஏன் என் உறவினர்கள் தொழில் செய்யக் கூடாதா” என்று கேட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த திட்டத்தில் எத்தனை கோடியோ ?

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், புதனன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்பட்டு விட்டால் தமிழகம் சொர்க்கபுரி ஆகி விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இந்த திட்டத்தால் ஏராளமான மக்கள் பயனடைவார்கள் என்று கூறியிருக்கிறார். உண்மையில் இந்தத் திட்டத்தால் ஆயிரக்கணக்கான கோடிகளை கையூட்டாக பெறவிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், அந்த சாலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்தையும் தவிர தமிழகத்தில் வேறு யாருக்கும், எந்த நன்மையும் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மை ஆகும்.” என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.

காவல்துறையின் மூத்த உயர் அதிகாரி இத்திட்டம் குறித்து பேசுகையில், “இது 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்.  அரசு இத்திட்டம் குறித்து உளவுத் துறையையோ, காவல் துறையையோ கலந்தாலோசிக்கவேயில்லை.   ஆனால் உளவுத் துறை இத்திட்டம் குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, இத்திட்டத்தினால், விவசாயிகளும், மலைவாழ் மக்களும், கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பது அரசுக்கு தெளிவாக உணர்த்தப்பட்டது.   ஆனால், அரசோ, முதல்வரோ, இது குறித்து எந்தக் கவலையும் படவில்லை.  இதை அரசுக்கு எடுத்து உணர்த்த வேண்டிய தலைமைச் செயலரும் இதை வலியுறுத்தவில்லை.

இதனால் கோடிக்கணக்கில் லஞ்சம் கிடைக்கும் என்பதைத் தவிர இத்திட்டத்தை இப்படி அதி தீவிரமாக செயல்படுத்த வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.  தற்போது உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் விதிகளின்படி, ஒரு கோடிக்கு மேல் உள்ள எந்த அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் அது லஞ்ச ஒழிப்புத் துறையால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.    ஆனால் இது செய்யப்படுமா என்பது கேள்விக்குறியே.   இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரியுமா என்பதே சந்தேகமாக உள்ளது.

இத்திட்டம் தொடக்கம் முதலே மிகவும் மர்மமான முறையில் செயல்படுத்தப்படுகிறது.   இத்திட்டம் குறித்து, மக்களுக்கு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், இத்திட்டத்தை மர்மமான முறையிலேயே செயல்படுத்துகிறது அரசு.

இத்திட்டத்தை இத்தனை அவசரமாக செயல்படுத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை.  ஏன் இந்த அவசரம் என்ற கேள்விக்கு கனத்த மௌனமே அரசின் பதிலாக இருக்கிறது” என்றார் அந்த மூத்த காவல்துறை அதிகாரி.

மத்திய அரசு உளவுத் துறை அதிகாரி ஒருவர், “பொதுத் துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை  மத்திய அரசு வேண்டுமென்றே தொடர்ந்து நஷ்டத்தில் வைத்துள்ளது.   அதன் உற்பத்தி குறைந்துள்ளது.

அந்நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டு விட்டது.   அது ஜிண்டாலின் JSW ஸ்டீல் நிறுவனத்துக்குத்தான் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த 8 வழிச் சாலையை இத்தனை அவசரமாக உருவாக்குவதன் பின்னணியில் ஜிண்டால் நிறுவனம் உள்ளது” என்றார்.

அவர் கூறுவதை என்னால் முழுமையாக நிராகரிக்க முடியவில்லை.   மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது முதலாளிகள் நடத்தும் முதலாளிகளின் அடிமை அரசாங்கம்தானே ?

இன்று, திருவண்ணாமலையில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், சேலம் எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் வனம் மற்றும் விளை நிலங்கள் குறித்து, விவாதிப்பதற்காக அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இன்று கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர், வெங்கடேசன் மற்றும் இணைச் செயலாளர் பலராமன் ஆகியோரை காவல்துறை கைது செய்தது.  மேலும் கூட்டத்தில் பங்கேற்க வந்த கிராமத்தினர் பலரை தடுத்துள்ளது.

மாணவி வளர்மதி, பியுஷ் மனுஷ், மன்சூர் அலி கான் என்று சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து பேசுவோர் அனைவரையும், காவல்துறையை வைத்து கைது செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

காவல்துறையை வைத்து மிரட்டியே இத்திட்டத்தை செயல்படுத்தி, பல ஆயிரம் கோடிகளை அள்ளிச் செல்லலாம் என்று கனவு காண்கிறார்.

வரலாறு எடப்பாடி பழனிச்சாமி போல பல எத்தர்களை பார்த்திருக்கிறது.  பல சர்வாதிகாரிகளை சந்தித்திருக்கிறது.   அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் மக்களை அடக்க நினைத்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளது வரலாறு.   வரலாற்றில் பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள், அத்தவறுகளை மீண்டும் செய்யும்படி சபிக்கப்படுவார்கள் என்றார் அறிஞர் ஜார்ஜ் சாந்தாயனா.

அதே வரலாற்றுத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

சேலம் 8 வழிச் சாலையை எதிர்த்துப் பேசினால் கைது. சிறை வாசம்.  சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து எழுதுவேன். மீண்டும் மீண்டும் எழுதுவேன்.

தமிழகமே இத்திட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும்.  உலகெங்கும் உள்ள தமிழர்கள் இத்திட்டத்துக்கு எதிராக எங்களோடு சேர்ந்து குரல் கொடுப்பார்கள்.

எத்தனை பேரை கைது செய்வீர்கள் பழனிச்சாமி ?

Credit: Savukku

பகிர்