ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது தொடர் புகார் வந்ததை அடுத்து கட்சி அலுவலகத்தை இழுத்து மூட ரஜினி உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களால் விரும்பப்படும் நடிகர், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். ரஜினிதான் முதல் இடம் ரஜினி அடுத்துதான் மற்ற நடிகர்கள் என்ற நிலை தமிழ்த் திரையுலகில் இன்றுவரை உள்ளது. ரஜினியின் வாய்ஸ் 1996-ல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும் தான் அரசியலுக்கு வருவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார் ரஜினிகாந்த். 22 ஆண்டுகள் கழித்து தனது அரசியல் அறிவிப்பை ரஜினி அறிவித்தார். ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை தான் நிரப்ப வந்ததாக ரஜினி தெரிவித்தார்.

ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆன்மிக அரசியல் தனது பாதை என்று அறிவித்த ரஜினிக்கு கன்னடர், பாஜக ஆதரவு நபர் என்ற விமர்சனங்கள் எழுந்ததான் காரணமாக தனது நிலையை அறிவிக்க சிரமப்பட வேண்டியிருந்தது.

இதுவரை தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் அறிவிக்காத ரஜினி தொடர்ந்து அவ்வப்போது அரசியல் நிகழ்வு குறித்து கருத்து சொல்லி வருகிறார். அதிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்தது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி நியமனத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள் எழுந்தன. மன்றத்துக்கு சம்பந்தம் இல்லாத லைகா முன்னாள் நிர்வாகியை பொதுச்செயலாளராக அறிவித்ததால் உள்ளுக்குள் புகைச்சல் கிளம்பியது. இதனால் இதைச் சமாளிக்க மீண்டும் சத்திய நாராயணாவை அழைத்து பொறுப்பை ஒப்படைக்கலாம் என்ற முடிவுக்கு ரஜினி வந்திருந்தார்.

இந்நிலையில் திரைப்பட ஷூட்டிங்கிற்காக ரஜினி வடமாநிலத்தில் தங்கியுள்ளார். ரஜினியின் மக்கள் மன்றத்திற்கான தலைமை அலுவலகம் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனியாக உள்ளது. இங்கிருந்துதான் மாநில நிர்வாகிகள் செயல்படுகிறார்கள். இந்த இடம் முன்பு ரஜினி தங்குதவதற்காக இருந்த இடம்.தற்போது அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், நீக்கம், சேர்ப்பது உள்ளிட்டவற்றில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நீடிக்கின்றன. இது குறித்த புகார்கள் வட மாநிலத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரஜினியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் இதனால் அதிருப்தியான ரஜினி மன்ற தலைமை அலுவலகத்தை இழுத்து மூடச்சொல்லி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி மன்றத் தலைமை அலுவலகம் மூடும் உத்தரவை சென்னையில் உள்ளவர்கள் அமல்படுத்துவார்களா? அல்லது ரஜினியிடம் பேசுவார்களா? என்பது போகபோகத்தான் தெரியும் என ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆனால் ரஜினி முடிவெடுக்க அதிகம் யோசிப்பார், முடிவெடுத்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதை அமல்படுத்துவார் என்று அந்த நிர்வாகி தெரிவித்தார்.

பொதுவாக ரஜினிகாந்த் மிக நல்லவர், தன்னால் யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது என்று நினைப்பவர், அவ்வாறு வந்தால் அதற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று நினைப்பவர் என்ற பெயர் உண்டு.

தன் பெயரைப் பயன்படுத்தி ரசிகர்களை ஏமாற்றும் அல்லது அவமதிக்கும் செயலை ரஜினி அனுமதிக்கமாட்டார், அதன் விளைவே இந்த முடிவு என்கிறார்கள். இது தற்காலிகமா? சென்னை திரும்பியவுடன் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

பகிர்