சென்னை: பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், பிராமண குல துரோகி என்றும் கமலை கடுமையாக விமர்சித்துள்ளது. உங்களுக்கு பிடித்த நூல் எது என டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் ‘பூணூல்’ என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார்.

பிராமணர்களின் அடையாள சின்னமான பூணூலை விமர்சித்து கமல் பதிலளித்தமைக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த பிராமண குல துரோகி நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறோம். பிராமண மக்களின் புனித அடையாளச் சின்னத்தை கீழ்தரமாக விமர்சித்தது கமலின் வக்ர புத்தியை காட்டுகிறது. பூணூலை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்துக்காக கலையை விற்கும் ஒரு வியாபாரி, தான் பிறந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் கேவலம் எந்த ஜாதியிலும் இருக்காது. ஜாதி இல்லை என்று கூறிக்கொண்டு தேவர் மகன், விருமாண்டி மற்றும் பல படங்களில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்திக் காட்டியவர்தான் இந்த வேஷதாரி. தைரியம் இருந்தால் மற்ற சமூகத்தினரையும் விமர்சிக்கட்டும். இந்த அரைவேக்காடு, போலி அரசியல்வாதி பிராமண குலத்தில் பிறந்ததற்காக, நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம்; மனவேதனை அடைகிறோம். வரும் தேர்தலில் பிராமண சமூகத்தினர் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’

பகிர்