தமிழகத்தை கடந்தவாரம் பரபரப்புக்குள்ளாக்கிய சம்பவம், மீன் விற்பனைக் கடைகள் மற்றும் சந்தைகளில் நடந்த அதிரடி சோதனை. சென்னை காசிமேடு, சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உணவுப்பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு மீன்கள் அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஃபார்மலின் தடவப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மீன் விற்பனைக் கடைகள் மற்றும் ஏற்றுமதி குடோன்களில் அதிரடி சோதனையை நடத்தினர் அதிகாரிகள்.

பெரிய மீன்களின் மீது ஃபார்மலின் ஸ்பிரே செய்யப்படுவதாகவும், மீன் பெட்டிகளில் வைக்கப்படும் ஐஸ் கட்டிகளில் ஃபார்மலின் கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாட்கள் மீன்கள் கெடாமல் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்ய முடியுமாம். ஃபார்மலினால் பதப்படுத்தப்பட்ட மீன்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

சென்னையில் விற்பனை செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் கலப்பு உள்ளதா என்பதை தெரிந்துகொள்வதற்காக, காசிமேடு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், போரூர் சிக்னல் அருகே உள்ள மீன் விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்பட்ட, கானாங்கெளுத்தி, தண்ணி பன்னா, சங்கரா, கிழங்கன், ஏரி வவ்வால், சுறா, கனவா, பாறை வகை மீன்கள் தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சோதிக்கப்பட்டன. சோதனையின் முடிவுகள் நம்மை அதிர்ச்சியில் உறையவைத்தது.

காசிமேட்டிலிருந்து வாங்கப்பட்ட கானாங்கெளுத்தி மற்றும் தண்ணி பன்னா வகை மீன்களில் ஃபார்மலின் கலப்பு உறுதியானது. கானாங்கெளுத்தி மீனில் 1 கிலோ கிராமுக்கு 5 மில்லி கிராமுக்கும் அதிகம் என்ற அளவிலும், தண்ணி பன்னா மீனில் ஒரு கிலோ கிராமுக்கு 50 மில்லி கிராமுக்கும் அதிகம் என்ற வீதத்திலும் ஃபார்மலின் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல், எம்.ஜி.ஆர். நகர் மீன் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட பாறை வகை மீனில், 1 கிலோ கிராமுக்கு 5 மில்லிகிராம் என்ற அளவில் பார்மலின் கலப்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. போரூர் மற்றும் எம்.ஜி.ஆர். நகரில் வாங்கப்பட்ட மற்ற மீன்களில் ரசாயனக் கலப்பு இல்லை என்பது தெரியவந்தது.

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ஃபார்மலின் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் கப்சா நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- அதிகாரிகளின் ஆய்வில் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. வீண் வதந்தி பரப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாட வேண்டாம்.

மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக என சந்தேகம் வந்தால் டுபாக்கூர் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யலாம். தேவைக்கும் குறைவாகவே மீன்கள் பிடிக்கப்படுவதால் ஃபார்மலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும், ஜெயலலிதாவிற்கு அப்பல்லோவில் எம்பாமிங் செய்தது போல் பார்மலின் வைத்து பத்தப்படுத்தி பிசினஸ் செய்து பொதுமக்கள் வயிற்றில் அடிக்க அவசியம் இல்லை, என்றார். அச்சமின்றி மீன் உணவை அனைவரும் உண்ணுமாறும், இல்லாவிட்டால் மீன்வளத்துறையில் தனக்கு கிடைக்கும் ‘கட்டிங்’ கில் துண்டு விழும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிர்