From Shyam Shanmugaam

நிர்மலா சீதாராமன் 45 நிமிடம் காத்திருக்க வைத்துப் புறக்கணித்தது பற்றிச் சென்னை விமானநிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, ‘‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று ஏற்கனவே, அண்ணா எங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறார்’’ என்று கூறிவிட்டார் ஓ.பி.எஸ்..

“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!” என்ற சொற்றொடர் அண்ணாவால் சொல்லப்பட்டது என்று ஓபிஎஸ் எண்ணிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் அவ்வாறு கூறியவர் – பகுத்தறிவுச் சிந்தனையாளரான லார்ட் பைரன்.பிரிட்டிஷ் அரசால் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார் அவர்.

தன சொந்த நாட்டில் இருந்து பிரான்ஸிற்கு புறப்படுவதற்கு முன் “டோவர்” துறைமுகத்தில் படகில் ஏறியபோது பைரன் பின்வருமாறு கூறினார் –
”என்னை நேசிப்போர்க்கு ஒரு பெருமூச்சு
என்னை வெறுப்போர்க்கு ஒரு புன்முறுவல்
என்ன வந்தாலும் சரியே,
எதையும் தாங்கும் இதயம் உண்டு”

“எதையும் தாங்கும் இதயம்” என்ற சொற்றொடரை ஆங்கில நூல்களிலும் இலக்கியத்திலும் புலமை பெற்று இருந்த பேரறிஞர் அண்ணா அரசியல் உவமையாகப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார்.

எத்தனையோ விஷயங்களைப் போல் நமது துணை முதல்வர் ஓ.பிஎஸ்.சுக்கு இதுவும் தெரியாது போலும்!

“காரியம் முடிந்ததும் கழற்றி விடு!”

டெல்லி அரசியலில் மேற்கண்ட விஷயம் புதிது அல்ல. “பயன்படுத்தியதும் தூக்கி எறி!” (USE AND THROW). காலம் காலமாக நாம் பார்த்து வரும் அரசியல் தத்துவம் தான்.

பிரபல எழுத்தாளரான இந்திரா பார்த்தசாரதி எழுதிய “தந்திரபூமி” தலைநகர் அரசியலின் நம்பிக்கைத் துரோகங்களைப் பட்டவர்த்தனமாக விளக்கும் நாவல். சாதாரண வாழ்க்கையில் இதைத் துரோகம் என்போம். அரசியலில் ராஜதந்திரம் என்பார்கள்.

துரோகம் தரும் வலியும் அவமானமும் எத்தகையது என்பதை நேரடியாக அனுபவித்திருக்கிறார் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய வாழ்க்கைக் குறிப்புகளை அம்மா வழி நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு கொஞ்சம் படித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்துமே 1970களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்தவை தான். துரோகத்தின் வலி என்ன என்பதை ஜெயலலிதா பின்வருமாறு விளக்கி உள்ளார்.

அப்போது ஜெயலலிதாவின் வீடு தி.நகர், சிவஞானம் தெருவில் இருந்தது. அவரைவிட மூத்த பெண் ஒருவர் பள்ளி மாணவியான ஜெயல்லிதாவைத் தேடிப் போய்த் தோழியானார்.

அந்த நட்புக்குப் பின்னால் வேறொரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருந்தது. அது அப்போது ஜெயலலிதாவுக்குத் தெரியாது..

ஜெயலலிதா வீட்டின் அருகே இருந்த வடநாட்டு வாலிபர் ஒருவரை நேசித்தார் அந்தப் பெண். சிவஞானம் தெரு வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் அந்த வாலிபர் இல்லம் தெரியும்.

அதனால் தினமும் அந்தப் பெண் ஜெயலலிதா வீட்டுக்கு வந்து, மொட்டை மாடியிலிருந்து நின்றுகொண்டு தன் மனதுக்கு உகந்தவரோடு சைகையில் பேசுவார். இதை ஒரு பால்காரர் பார்த்து விட்டார். ..

வெடித்தது பூகம்பம். தோழியின் பெற்றோர் ஜெயலலிதாவின் தாயார் வரை புகார் செய்து சரமாரியாகத் திட்டினார்கள்..

தோழி உண்மையைச் சொல்லித் தன்னைக் காப்பார் என்று எதிர்பார்த்தார் ஜெயலலிதா. ஆனால், நண்பியோ அமைதி காத்துவிட்டார். வசைச் சொற்கள் தாக்கியபோது கூடத் தன் “ப்ரண்டை” காட்டிக் கொடுக்கவில்லை ஜெயலலிதா .

“துரோகம் இவ்வளவு வலியைத் தருமா என்று வெகுநாட்கள் இதை நினைத்து அழுதிருக்கிறேன்!” என்று இந்தச் சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

அதற்குப் பின் அந்தத் தோழி என்ன ஆனார் என்று ஜெயலலிதா எந்த இடத்திலும் விளக்கவில்லை. ஆனால் அன்று முதல் அவர் துரோகத்தை என்றுமே மன்னித்தது இல்லை.

“மோடியா, லேடியா?” என்ற கேள்வியை எழுப்பி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா 37 எம்.பி.களைப் பெற்றார்.

ஆனால் அவர் இயற்கை எய்தியதும் ஜெ. பெற்ற வெற்றிக்கும் தமிழக மக்கள் போட்ட வாக்குகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அதிமுகவின் 37 எம்.பி.க்களும் பாரதிய ஜனதா அரசை ஆதரித்து ஓட்டுப் போடுமாறு ஏற்பாடு செய்தார் ஓ.பி.எஸ்.

ஆக, அதிமுகவின் உட்கட்சிப் பூசல் புதிய பரிணாமத்தை எட்டி உள்ளது.

முன்பு நடந்தது “தர்ம யுத்தம்”. இப்போது நடந்து கொண்டிருப்பது “மர்ம யுத்தம்”.

இறுதி வெற்றி யாருக்கோ?

பகிர்