கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி ஜூலை 28 நள்ளிரவு 1.30 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று இரவு திடீரென 11.45 மணியளவில் ‘தலைவருக்கு ரொம்ப முடியலை. ரத்த அழுத்தம் இறங்கிக்கிட்டே இருக்கு’ என்ற தகவலை அடுத்து உடனே புறப்பட்டு வந்தார் ஸ்டாலின். அந்த நள்ளிரவிலும் கோபாலபுரம் இல்லத்து வாசலில் தங்கள் தலைவரின் முகத்தைக் காண எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர் தொண்டர்கள். ‘கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க’ என்ற கோஷத்துடன்.
சில மணித் துளிகளில் கோபாலபுரம் மாடி அறையிலிருந்து கருணாநிதியை ஸ்ட்ரெச்சரில் கீழே அழைத்துவந்தனர். தலைவா தலைவா என்று தொண்டர்கள் கதறினார்கள். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஆம்புலன்ஸில் திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
‘ தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என வெளிவரும் தகவல்களால், சற்று நிம்மதி அடைந்துள்ளனர் உடன்பிறப்புகள். ‘ இதயத் துடிப்பு சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. சிறுநீரகப் பாதையில் இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றைக் குணப்படுத்தும் மருந்துகள் அளிக்கப்பட்டுவருகின்றது’ என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று, நேற்று நள்ளிரவு கோபாலபுரத்துக்கு வந்ததால் அறிவாலய வட்டாரத்தில் அதிர்ச்சி கிளம்பியது. நாடித் துடிப்பின் அளவு குறைந்ததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர் மருத்துவர்கள். ‘அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்’ என அழகிரி, கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறவுகளுக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பப்பட்டது. ‘தலைவருக்கு என்னாச்சு?’ எனக் கனிமொழி பதற்றத்தோடு கேட்க, ‘காவேரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறோம்’ எனத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குக் கிளம்ப இருந்த கனிமொழிக்கு, டிரைவர் இல்லாத தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, அருகில் பாதுகாப்புக்கு இருந்த காவலர் ஒருவரின் பைக்கில் ஏறி, மருத்துவமனைக்குக் கிளம்பினார். அதேநேரம், ரெசிடென்ஸி ஓட்டலில் தங்கியிருந்த அழகிரி, தகவலைக் கேள்விப்பட்டு கோபாலபுரம் இல்லத்துக்கு விரைந்தார். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவங்களால், அதிர்ச்சியில் உறைந்தனர் தி.மு.க நிர்வாகிகள். பெரும் திரளாக கோபாலபுரம் இல்லத்தின் முன்பு அவர்கள் குவிந்தனர். அதிகாலை 1.30 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. 20 நிமிடங்கள் நீடித்த சிகிச்சையின் பயனாக, அவர் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.
“கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுவரும் ஏற்ற இறக்கங்களால் மிகுந்த கவலையில் உள்ளனர் குடும்ப உறவுகள். கருணாநிதியை ஏன் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள் என நிர்வாகிகள் சிலர் சர்ச்சையை எழுப்பினர். குடும்ப உறவுகளுக்குள்ளும் அடுத்தகட்ட பஞ்சாயத்துகள் தொடங்கிவிட்டன ” என விவரித்த தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர்,
“குறிப்பாக, ‘ட்ரக்கியோஸ்டமி குழாயை மாற்றுவதற்கு, மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதால்தான் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்புவரை, அவர் நன்றாகத்தானே இருந்தார். வீட்டிலேயே ஏன் வைத்திருக்க வேண்டும்? அவர் நன்றாக இருக்கிறார் என்பதால்தானே நாங்கள் எல்லாம் வராமல் இருந்தோம்’ என அழகிரி தரப்பில் பேசியதாகத் தகவல் வெளியானது. ஆனால், ‘கருணாநிதியின் உடல்நிலை தேறி வர வேண்டும்’ என்பதில் அழகிரி உறுதியாக இருக்கிறார். நேற்று மதியம் அவரிடம் பேசிய மருத்துவர்கள், ‘எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்போதும்’ எனக் கூற, ‘நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி. நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம்’ எனக் கூறிவிட்டார். நள்ளிரவில் வந்த தகவலையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்தனர் குடும்ப உறுப்பினர்கள். நேற்று டெல்லியில் இருந்து திரும்பிய கனிமொழி, ‘தலைவர் குணமாவார் என நம்புகிறேன்’ என விரக்தியோடுதான் பேசினார். தற்போது மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ‘தலைவர் உடலில் நல்ல ரெஸ்பான்ஸ் தெரிகிறது’ எனச் சற்று உற்சாகமாகிவிட்டார்.
கருணாநிதியின் உடல்நலன் குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் அழகிரி கேட்டபோது, ‘பல்ஸ் குறைவாக இருந்தது. இங்கு வந்த அரை மணி நேரத்தில் சரியாகிவிட்டது. இப்போது, பழையபடி இதயத்துடிப்பு சீராக இயங்கிவருகிறது. சிறுநீரகத் தொற்றின் பாதிப்பு மட்டும் குறையவில்லை. இரண்டு பாதைகளில் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்வதற்காக ஆன்டிபயாட்டிக் கொடுத்தால், வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, படிப்படியாக மருந்தைக் கொடுத்துவருகிறோம். காய்ச்சல் குறைந்துவிட்டது’ என மருத்துவர்கள் விவரித்துள்ளனர். அதன்பின்னர், ஆதரவாளர்களிடம் பேசிய அழகிரி, ‘தலைவர் ஊசி போட்டுகூட நான் பார்த்ததில்லை. இப்போது நடக்கும் சிகிச்சைகளைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை’ எனக் கண் கலங்கினார்” என்றார் விரிவாக.
” பொதுவாக, எந்தவித மன உளைச்சலுக்கும் இடம் கொடுக்க மாட்டார் கருணாநிதி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உணவு என்பதே அவருக்கு அரிதாகத்தான் இருந்தது. உடலில் ஏற்பட்ட நோய் தாக்கத்துக்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகளின் தாக்கமும் அவரது மனஉறுதியும்தான் இதயத் துடிப்பை சீராக இயங்கவைத்துக்கொண்டிருக்கிறது” என்கின்றனர் மருத்துவர்கள். ‘இயற்கையுடனான போராட்டத்தில் அவர் வெல்வார்’ என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் உடன்பிறப்புகள்.