திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைவு காரணமாக உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும், அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட தீவிர சிகிசைசையை அடுத்து தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் திடீரென திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் கருணாநிதியின் உடல் நிலை சற்று தேறி வந்தது. அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

ஆனால் நள்ளிரவில் திடீரென கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து கருணாநிதியின் தனிப்பட்ட மருத்துவர் கோபால், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் அவசரமாக கோபாலபுரம் வந்தனர். உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் அவசர அவசரமாக அங்கு வந்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அறிவுரைப்படி கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

உடனடியாக அங்கு கொண்டுவரப்பட்ட காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 4 ஆவது மாடியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுகவின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமாக ஆ.ராசா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைவு காரணமாக உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும், அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட தீவிர சிகிசைசையை அடுத்து தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்துளிகளில் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானதாகவும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் எனவும் கூறினார். மேலும் இது தொடர்பாக மருத்துமனை நிர்வாகம் சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என ராசா தெரிவித்தார்.

கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் என்பதே தேவைப்படவில்லை என்றும் கூறிய முன்னாள் மததிய அமைச்சர் ஆ.ராசா, அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என கூறினார்.

பகிர்