சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று பார்த்தனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக பின்னர் அவர்கள் தெரிவித்தனர்
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக நேற்று மாலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.
ஆனால், காவேரி மருத்துவமனையின் முன் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குழுமினர். இவர்களை கலைந்து செல்லக் கோரி போலீஸார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் சீராக இருப்பதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, அழகரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று காலை மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இதற்கிடையே, சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை 3 நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றிருந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை கடந்த இரு நாட்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, திங்கள்கிழமை காலை மாநகராட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணத் தி்ட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.
திங்கள்கிழமை நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் அவர்களுடன் மருத்துவமனைக்கு வந்தனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி ஆகியோருடன் சென்று அவர்கள் கருணாநிதியை நேரில் சென்று பார்த்தனர். பின்னர் மருத்துவக்குழுவினரிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் வெளியே வந்தபின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் சீராக உள்ளது. நானும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோருடன் சென்று, சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, நேரடியாக சென்று பார்த்தோம் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலம் பெற்று வருகிறார்’’ எனக் கூறினார்.