திமுக தலைவர் கருணாநிதி ஆழமாகவும் அழுத்தமாகவும் விரும்பி சுவாசிக்கும் தமிழ் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என, நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது. கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், திரைத்துறையினர் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை நடிகர் பார்த்திபன் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், “கருணாநிதி நலம் பெற வேண்டி நிறைய பேர் கடவுளை வணங்குகின்றனர். அதுதான் அவருடைய மிகப்பெரும் சக்தி என்று நான் நினைக்கின்றேன்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது மாதிரி தமிழை நம்பினோரும் கைவிடப்படார். அதனால் கருணாநிதி நம்புகின்ற தமிழ், அவர் ஆழமாகவும் அழுத்தமாகவும் விரும்பி சுவாசிக்கும் தமிழ் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை” என தெரிவித்தார்.