சட்டப்பேரவை தேர்தல் வந்தால் 200 தொகுதிகளில் வெல்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடியது.
கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:
”மன்னார்குடியில் பல பெருந்தலைவர்கள் கூட்டம் நடத்தியுள்ளனர். பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இங்கு பேசியுள்ளனர். இந்த பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. நான் இதே ஊரில் பள்ளிச் சிறுவனாக சென்றுள்ளேன்.
இன்று உங்கள் முன் மேடையில் நிற்கிறேன். ஜெயலலிதா என்னை பொறுப்புக்குக் கொண்டு வந்தபோது இதே பகுதியில் அவரோடு அவரது பிரச்சார வாகனத்தில் வந்துள்ளேன். ஜெயலலிதா எத்தனையோ திட்டங்களைக் கொண்டுவந்தார். அது மற்ற மாநிலங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால் இன்று என்ன நிலை, தினம் தினம் ரெய்டு, கோடி கோடியாய் பணம் கைப்பற்றப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் செய்த துரோகத்திற்குப் பதில் சொல்லும் காலம் வரும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தால் இவர்களுக்கு நாங்கள் யாரென்று காட்டுவோம். ஆர்.கே.நகர் தொகுதி எங்களுக்குப் பழக்கம் இல்லாத தொகுதி. ஆனால், ஜெயலலிதாவின் தொகுதி.
திருப்பரங்குன்றம் தொகுதி அப்படியல்ல. நாங்கள் ஓடி விளையாடிய தொகுதி. உங்களுக்காக காத்திருக்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலில் கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக்கொண்டு கருத்துக்கணிப்பு சொன்னார்கள். மதுசூதனனை மகாத்மா காந்தி அளவுக்கு சொன்னார்கள். அவர் வெல்லவே வாய்ப்பு, திமுக இரண்டாம் இடம், தினகரனுக்கு டெபாசிட் கிடைக்காது என்றார்கள்.
ஆனால் நடந்தது என்ன? மக்கள் துரோகத்தை மறக்கவில்லை. தக்க பதிலடி கொடுத்தார்கள். ஏன் தோற்றோம் என்று தெரியாமல் அமைச்சர்கள் முக்காடு போட்டு போன கதையெல்லாம் தெரியும். அங்கேயே அப்படி என்றால் திருப்பரங்குன்றம் பற்றிச் சொல்லவா வேண்டும். இங்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று தெரிந்துதான் அன்றே ஜெயலலிதா என்னை திருப்பரங்குன்றத்துக்கு பொறுப்பாக்கினார் போலும்.
திருப்பரங்குன்றத்தில் கூடுதலாக கூட ஓட்டுக்கு பணம் கொடுங்கள். நான் வேண்டுமானால் உங்களுக்கு தொகுதியில் ஆள் இல்லை என்றால் எங்கள் ஆட்களை அனுப்புகிறேன். நீங்கள் என்ன செய்தாலும் 75 சதவிகித வாக்கு பெற்று திருப்பரங்குன்றத்தில் வெல்வோம். மன்னார்குடியில் நீங்கள் மட்டுமல்ல இன்னொரு கூட்டமும் பீஸ் போய் கிடக்கிறது. அதுமட்டுமல்ல சட்டப்பேரவை தேர்தல் வந்தால் குக்கர் சின்னம் 200 தொகுதிகளைக் கைப்பற்றும். அடுத்து மன்னார்குடியில் நடக்கும் கூட்டம் வெற்றி விழாவாக அமையும்.”
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த திவாகரன், “தினகரன் அணியினர் மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கின்றனர். பொதுக்கூட்டத்துக்கு மக்கள் டோக்கன் கொடுத்து வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். மதியம் 3 மணிக்கெல்லாம் பெண்கள் கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றுவிட்டனர்.
விசாரித்தபோது, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குக்கர் கொடுக்கப்படும் எனக் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். ஆக, எங்கிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது? எங்கிருந்து பணத்தை எடுத்து வீசுகின்றனர் என்பது புரியவில்லை. வீசும் பணத்திற்கு வரி கட்ட வேண்டும். இல்லையென்றால் எல்லோரும் தலையில் கை வைத்துதான் ஆக வேண்டும்” என திவாகரன் விமர்சித்தார்.