நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கு வருவதாக நீண்ட காலம் கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியல் குறித்த பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்தார். கடந்த ஆண்டின் இறுதியில் தனது ரசிகர்களை தொடர்ச்சியாக சந்தித்த ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ஒரு வழியாக அறிவித்தார்.
இதன் பிறகு ரஜினிகாந்த் தனது மன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மற்றொரு பக்கம் திரைப்படங்களில் வரிசையாக புக் செய்யப்படும் வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைந்து அதன் தலைமை பொறுப்புக்கு வர திட்டமிட்டுள்ளதாக சில செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் விவாதத்தின்போது இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை ரெய்டுகளின் மூலம் அதிமுகவில் உள்ள சிலருக்கு செக் வைத்துவிட்டு ரஜினிகாந்தை அதிமுகவில் முன்னிலைப்படுத்த பாஜக திட்டமிடுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இப்போது உள்ள அதிமுக தலைமையில் ரஜினிகாந்துக்கு திருப்தியில்லை என்றும், அவருக்காகவே இந்த கிளீனிங் வேலை நடைபெறுவதாகவும் பீட்டர் அல்போன்ஸ் கூறியிருந்தார். சில வாரங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த்தை வைத்து பாஜக செய்யும் மூவ்கள் குறித்த செய்தி வெளியிட்டிருந்தது ஒரு பிரபல இணைய தளம்.
அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் விசுவாசிகளின் வாக்குகளை ஈர்க்கும் திட்டத்தோடு ரஜினிகாந்த் இருப்பதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று வரிசையாக சினிமா பின்புலம் கொண்டவர்களால் ஈர்ப்பு கொண்டவர்கள் அதிமுக தொண்டர்கள். அந்த இடத்தை ரஜினிகாந்த் நிரப்புவதற்கு முயற்சி செய்யக் கூடும் என்றும் அந்த செய்தி வெளியிட்டிருதார்கள். இந்த நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், ஏறத்தாழ இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஒரு பக்கம் கலைஞரையும் புகழ்கிறார், எம்ஜிஆரையும் புகழ்கிறார், ரஜினிகாந்த் நிலைப்பாடு குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கருணாநிதியின் தனிப்பட்ட செயல்பாடுகளையும் எம்ஜிஆரின் ஆட்சியையும் ரஜினி புகழ்வதன் மூலம் எம் ஜி ஆர் ஆட்சியை தர விரும்புவதாக கூறுகிறார். அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் விசுவாசிகளை ஈர்க்க ரஜினி முயல்கிறாரா என்ற கேள்விக்கு, அதிமுகவுடன் இணைந்து செயல்பட ரஜினி விரும்பக் கூடும் என்று பாண்டியராஜன் தெரிவித்தார்.
கூட்டணிக்கான வாய்ப்புகள் ரஜினிக்கு திறந்து இருப்பதாக நீங்கள் கூறுவதன் பொருளை எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு, கூட்டணிக்கு வாய்ப்பு மட்டுமல்ல, ரஜினிகாந்த் எங்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்புள்ளது இவ்வாறு பாண்டிய ராஜன் தெரிவித்தார். புதிதாக ஒரு கட்சியை தொடங்கி கட்டமைப்பை ஏற்படுத்தி (சொத்தை செலவு செய்து) ஏற்கெனவே உள்ள பிற கட்சிகளின் நிர்வாகிகளைக் எதிர்த்து, அவர்களை சமாளித்து தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மிகப் பெரிய பணி. விஜயகாந்த் போன்றவர்கள் வீரத்துடன் அதைச் செய்தாலும் கூட, அந்த கட்டமைப்பை நீடித்து நிலைக்க வைக்க முடியவில்லை. எனவே, ஏற்கெனவே நல்ல கட்டமைப்புடன் உள்ள தமிழகத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியை கொண்ட அதிமுக தலைமை பீடத்திற்கு, ரஜினிகாந்த் முயலக் கூடும் என்ற அரசியல் பார்வையாளர்களின் கருத்தை, பாண்டியராஜனின் பேட்டி ஏறத்தாழ உறுதி செய்துள்ளது,
“தகுந்த திட்டமிடலின்படி ஒவ்வொன்றும் நடக்கிறது. ஒரு நாள் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தாங்கள் ரஜினியின் தலைமையில் பணி செய்தால்தான் புரட்சி தலைவர் மற்றும் தலைவியின் ஆட்சியை நிலைத்து தரமுடியும் என்று சொல்ல எல்லா வாய்ப்புகளும் இருப்பதையே மாஃபா பேட்டி நமக்கு உணர்த்துகிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா நோகாமல் நோன்பு கும்பிடுவது இதுதான். மக்களுக்காக உழைக்காமல் செலவழிக்காமல் கஷ்டப்படாமல் சொந்த பணத்தை அப்படியே பாதிப்பு இல்லாமல் வைத்துக்கொண்டு நேராக முதலமைச்சர் பதவில் உட்காருவது என்பது இதுதானோ? பதவிக்காக நிறம் மாறும் அடிமைகளுக்கு ரஜினி தலைமையை ஏற்றுக் கொள்வது எளிது. எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் எனக்கு முதல்வர் பதவி கொடுங்க என்று ரஜினி அழுதபோதே இதில் மர்மம் ஆரம்பித்தது. இப்போது முடிச்சு அவிழ்கிறதோ. ஆனால் மக்களும் தொண்டர்கள் ஓரளவு விழிப்புடன் உள்ளார்கள்.” என்றார் கப்சா நிருபர்.