முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகியோர் சந்தித்தனர்.

கருணாநிதியின் உடல்நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு ஆகியோர் முதல்வர் பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை பாதிப்பால் கடந்த 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 29-ம் தேதி அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் சீரான அவரது உடல்நிலை சரியாகாமல் மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிப்படைந்தது.

24 மணி நேரம் தீவிர கண்காணிப்புக்குப் பின் எதையும் தெரிவிக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, டி.ஆர்.பாலு, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் முதல்வரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் தலைமைச் செயலாளருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் குழு முதலவருடன் ஆலோசனை நடத்தியது.

பகிர்