தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் அளிக்கப்படாததைக் கண்டித்து, காவேரி மருத்துவமனை வாசலில் பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர் தொண்டர்கள். ‘கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். சில அரசியல் காரணங்களால் அமைதி காக்கிறார்’ என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

கருணாநிதி உடல்

காவேரி மருத்துவமனையில், கடந்த 10 நாள்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கருணாநிதியின் உடல்நிலை, நேற்று கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, அவருக்கு 24 மணி நேர கெடுவை விதித்தனர் மருத்துவர்கள். இன்று அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாததால், அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினர் மருத்துவர்கள். இதன்பின்னர், கலங்கிய கண்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கக் கிளம்பினார் ஸ்டாலின். அவருடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உடன் சென்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த சந்திப்பில், ‘உங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறேன். எங்கள் தரப்பில் எந்தவிதச் சிக்கலும் இல்லை’ என முதல்வர் தரப்பில் விவரித்ததாகத் தெரிவித்தனர் ஆளும்கட்சி நிர்வாகிகள்.

இதற்கு முன்னதாக, நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கடந்த 6-ம் தேதி முதல்வரைச் சந்தித்து இதே கோரிக்கையை வைத்தபோது, ‘காந்தி மண்டபம் அருகில் இடம் பார்த்துக்கொள்ளலாம். அண்ணா சமாதியில் கிடைப்பது அரிது’ எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அந்த நேரத்தில் எந்தப் பதிலும் சொல்லாமல் நேரம் கடத்திப் பதில் அளித்தது, தி.மு.க தரப்பைக் கொந்தளிக்கவைத்துவிட்டது. ‘நாம் நினைத்திருந்தால் எப்போதோ இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இதெல்லாம்’ எனக் குடும்ப உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருப்பது கடலோர மண்டலப்பகுதி. ஆனால் அண்ணா சமாதி இருப்பது கடலோர மண்டலப் பகுதி இல்லை. அது கூவம் நதியின் கரைப்பகுதியாகும். அது மாநகாரட்சிக்கு உட்பட மயானப்பகுதி.

கருணாநிதி நல்லடக்கத்துக்காகக் கோரப்பட்ட இடம் கூவம் நதிக்கரைதான். அதனால் அதில் சிக்கல் இல்லை” என முதல்வர் தரப்பில் விவரித்ததாகத் தெரிவித்தனர் ஆளும்கட்சி நிர்வாகிகள்.

பகிர்