சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகில், கருணாநிதியின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தி.மு.க. தொண்டர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து மாலை 4 மணியளவில் கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் வைக்கப்பட்டு, முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலை, மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது. பின்னர் அண்ணா சமாதியில் வலது புறமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு மேற்கூரை (ஷாமியானா) கூட இல்லாமல் கருணாநிதியின் சந்தனப்பேழை புதைக்கப்பட்டது.
காலை முதலே சன் தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட சன் குழும சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள். 7.20 மணி ஆனதும் (கலைஞர் உடல் அடக்கம் முடிந்ததும்) நேரலை நிறுத்தப்பட்டு சன் குழும சேனல்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டது வேதனை அளித்தது. சன் டிவியில் நந்தினி சீரியல், ராதிகாவின் வாணிராணி. கே டிவி யில் வழக்கம் போல் அடுத்தடுத்து சினிமா, சன்மியூசிக்கில் காதல் பாடல்கள் சிரிப்பொலி ஆதித்யா டிவியில் வடிவேலு நகைச்சுவை என ரகளை தான். துக்கம் அனுஷ்டித்ததாக தெரியவில்லே.
எல்லாம் விளம்பர வருமானம் படுத்தும் பாடு. ஒரு 24 மணி நேரம் கூட தன் வருமானத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாதவன் குடும்ப துக்கத்துக்கு, சின்னஞ்சிறு வியாபாரிகள் கூட கடையை அடைக்கணும். கேவலம். பொது மக்களின் துக்கம் கலைந்தது. இந்த வியாபார காந்தங்களுக்கா கண்ணீர் வடித்தோம்? கருணாநிதியின் உடலைப்பார்க்க வெளியூர்களில் இருந்து வந்த கடைக்கோடி தொண்டன் எப்படி ஊர் போய் சேருவான் என்ற கவலை இல்லை.
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் தான் திமுக தொண்டனுக்கே திமுக பிடிக்காமல் ஜெயலலிதா இரண்டு முறை தொடர் வெற்றி பெற்றார் என்பதை மறக்க முடியாது. சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதா என்பது குறித்த ஒரு செய்தி இல்லை. நேற்று முதல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்த ஒரு பதிவு இல்லை. கூட்ட நெரிசலில் பலியான இருவர் படுகாயமடைந்த 80 பேர்/ போலீசார் உள்ளிட்ட செய்தியில்லை. போயும் போயும் இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கும் வியாபாரிகளுகுமா கண்ணீர் வடித்தோம்? என்பதே மக்கள் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது..