சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அண்ணா நினைவிடத்தில் பணிகள் துவங்கின. ஏற்கனவே, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து டிராஃபிக் ராமசாமி, பாமகவை சேர்ந்த கே. பாலு, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த துரைசாமி ஆகியோர் தொடர்ந்திருந்த வழக்குகளை சம்பந்தப்பட்டவர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டதால், அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் சிறப்பு விசாரணை, செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து புதன்கிழமை அதிகாலைவரை நடைபெற்ற நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, காலை 8 மணியளவில் மீண்டும் இந்த வழக்கின் விசாரணை துவங்கியது. தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தி.மு.கவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், ஆர். விடுதலை ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என்பது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பை தி.மு.க. எதிர்க்க முடியாது என அரசுத் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது.
மேலும் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் மறைந்தபோது, நெறிமுறைகளைக் காரணம் காட்டி மெரினா கடற்கரையில் அவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும் பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முன்னாள் முதல்வர்களையும், தற்போதைய முதல்வர்களையும் ஒரே மாதிரி நடத்த முடியாது என்றும் அரசுத் தரப்பு கூறியது.

தி.மு.கவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. வில்சன், காமராஜர் நினைவிடமும் காந்தி மண்டபமும் அடையாறில் இருப்பதற்குகக் காரணம், திராவிட இயக்கத் தலைவர்களின் சித்தாந்தங்களும் அந்தத் தலைவர்களின் சித்தாந்தங்களும் வேறுபட்டவை என்பதால்தான் என்று வாதிட்டார்.
ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் திட்டமிட்டு வாபஸ் பெறவைக்கப்பட்டன என தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். வைத்தியநாதன் இந்தக் கருத்தைத் தெரிவித்ததும் அதற்கு தி.மு.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைதியாக வாதிடும்படி நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் கூறினார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பெரியார் மெரினா கடற்கரையில் புதைக்கப்படவில்லையே என்று வைத்தியநாதன் கேள்வியெழுப்பினார். கருணாநிதியின் முன்வைத்த கொள்கைகளையே தி.மு.க பின்பற்றவில்லையென்றும் இது அவரது நினைவுக்குப் பெருமை சேர்க்காது என்றும் வைத்தியநாதன் வாதிட்டார். கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் புதைக்க அனுமதித்தால் அதனை யாரும் எதிர்க்கப்போவதில்லையே என நீதிபதி சுந்தர் கேள்வியெழுப்பினார்.

மாநில அரசு கருணாநிதி மீது பெரும் மரியாதை வைத்திருப்பதாகவும் தி.மு.கவின் ஆர்.எஸ். பாரதி ஒன்றுமில்லாத விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதாகவும் அதனால் அவரது ரிட் மனுவை ஏற்கக்கூடாது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரான வைத்தியநாதன் கூறினார். ஒரு ரிட் மனுவை இவ்வளவு அவசரமாக விசாரித்து, தீர்ப்பளிக்கக்கூடாது என்றும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி சுந்தர், ‘ஒரு வாரம் வேண்டுமானால் ஒத்திவைக்கலாமா?’ என்று கேலியாகக் கேட்டார்.

இதற்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதிகள், கருணாநிதியின் உடலை மெரினாவில் புதைக்க அனுமதிப்பதாக கூறினர். அவரது உடலை அங்கு ஏன் புதைக்கக்கூடாது என்பதற்கு போதுமான காரணங்களை அரசுத் தரப்பு வழங்கவில்லையென்றும் தெரிவித்தனர். இதனால், அவரது உடலைப் புதைக்க நிலம் ஒதுக்கிக்கொடுக்கும்படியும் கூறினர்.

இந்தத் தீர்ப்பு குறித்த செய்தி வெளியானதும், கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹால் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெரும் ஆரவாரக் குரல் எழுப்பினர். கருணாநிதியின் மகனும் தி.மு.கவின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின், இந்தத் தீர்பைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுதார். அவரை ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் ஆற்றுப்படுத்தினர். கூடியிருந்த தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை.
இதையடுத்து அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தி.மு.க. தலைவரின் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அக்கட்சி தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், சட்ட சிக்கல்களை மேற்கோள்காட்டி, தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்தது. சர்தார் படேல் சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக, காந்தி மண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடுசெய்வதாக கூறியது.

தமிழக முதல்வர்கள் சி.என். அண்ணாதுரை, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளன. முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரின் நினைவிடங்கள் காந்தி மண்டபம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் காலமான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.

ஒருகட்டத்தில், போலீஸ் கட்டுப்பாட்டை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு தொண்டர்கள் திடீரென கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெண் போலீசார் உட்பட 30-க்கும் பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

“இருக்கும் போது குடும்பத்திற்காக லட்சம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து கிறங்கடித்த கருணாநிதி, இறந்த பின்பும் அரசுக்கு சொந்தமான பொது சொத்தை அதுவும் மெரினாவில் ஆட்டையை போட்டு சாதனை புரிந்துள்ளார் முழு வாழ்க்கை வாழ்ந்து, கல்யாணசாவு செத்தும், கூட்ட நெரிசலில் உயிர்ப்பலி படுகாயம் என மக்களை வதைத்து ஒன்றரை லட்சம் பேர் பலியான இலங்கை இனப்படுகொலையை நிகழ்த்தியதை உலகுக்கு பறைசாற்றினார்” என் அங்கிருந்த ஒரு கப்சா உடன்பிறப்பு லைவ் அப்டேட் தருகிறார்.

பகிர்