நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’. சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. படத்தில் முஸ்லீம் மதத்தவர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து, சில முஸ்லீம் அமைப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சில நாட்களுக்கு பின்னரே விஸ்வரூபம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் டிரைலராக காட்டப்பட்டு, விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதிப் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது.
இதனிடையில், நடிகர் கமல்ஹாசன் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் (2015), ஜித்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் (2015), சி.கே.திவாகர் இயக்கத்தில் தூங்காவனம் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் பாபநாசம் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரமான நாயுடுவை வைத்து சபாஷ் நாயுடு படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால், அந்தப் படமும் நிதிப்பிரச்சனையால் பாதியிலேயே தடைப்பட்டது.
இதற்கிடையில்தான் ஆரம்பமானது பிக்பாஸ் என்ற ரியாலிட்டு ஷோ. ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த ஷோவை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், அவரின் பேச்சுப் புலமை இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற மிகப்பெரிய அளவில் உதவியது. அதுவரையில், சமூகப் பிரச்சனைகளுக்கு நடிகனாக குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன். அந்த சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவராக, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியில்தான்.
முதலில், தமிழ் கலாச்சாராத்திற்கு எதிராக உள்ளது என ஆரம்பித்த பிக்பாஸ் பிரச்சனை, படிப்படியாக உருவெடுத்து, கமலுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறியது. இதனால், கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்துப் போர் உண்டானது. இதன் விளைவாக, நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.
அதே வேளையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, மதுரையில் நடந்த மாநாட்டில், சொன்னபடி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் ‘விஸ்வரூபம் 2’ மறுபுறம் மக்கள் நீதி மய்யம் இரண்டையும் ஒருசேர கட்டமைத்தார் கமல்ஹாசன். தற்போது, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது.
கடந்த முறையை போல் இல்லாமல், இம்முறை படத்திற்கு பிரச்சனைகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், படம் வெளியான பின் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தது போலவே மதுரை திண்டுக்கல் ரமநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரிலீசாகவில்லை. தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. தற்போது கமல்ஹாசனுக்கு நடிகனாக தனது ரசிகனை மட்டுமில்லாமல், ஒரு தலைவனாக தனது தொண்டனையும் இப்படத்தில் திருப்தி படுத்த வேண்டியுள்ளது.
கமலின் விஸ்வரூபம் 2 படத்தில் நீக்கப்பட்ட வார்த்தைகள் மற்றும் வசனங்களின் விபரம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரிலீசான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து சென்சார் போர்டில் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றிய விபரங்கள் என வாட்ஸ் அப்பில் ஒரு படம் வைரலாகியுள்ளது. அதன்படி மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள்.
விஸ்வரூபம் 2.. சென்சார் போர்டில் ‘கட், மியூட்’ செய்யப்பட்ட 22 காட்சிகள் இவை தான்! https://t.co/OC0Vuc7yg8 #Vishwaroopam2 pic.twitter.com/WjzXpYleXx
— Tamil Filmibeat (@FilmibeatTa) August 9, 2018
அதன்படி, ஐஎப்எஸ், பாஸ்டர்ட், பாகிஸ்தான், சவுத் பிளாக், மாதர்சோத், பாரத் மாதா, அல்லாஹ், உங்க வழக்கப்படி போன்ற வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சில வன்முறைக் காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்ட இடங்களில் அராபிக் மொழியில் பேசப்பட்ட வசனங்களுக்கு தமிழில் சப் டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. பர்தாவைக் கிழிப்பது போன்ற காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. “நீங்க ஜிகாத்தியோட தங்கி… திரும்பி வந்திருக்கீங்க” என்ற வசனத்தை முழுவதுமாக படத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
பாத்ரூமில் நிருபமா உடைகளைக் களைவது போன்ற காட்சியில் 40 சதவீதமாக காட்சியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆபாசமாக இருப்பதாக படுக்கையறைக் காட்சிகளும் 50 சதவீதம் வரை நீளம் குறைக்கப்பட்டும், மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளன.
இப்படத்தின் தோல்வியை பார்க்கும் போது, கடைசியில் சினிமாவும் போய், அரசியல் ஆசையும் நிராசை ஆகி ஒரு அரசியல் அநாதையாக டி.ஆர் போல் சிவாஜி கணேசன் போல் நிர்மூலமாகி விடுவார் முத்தநாயகன் கமல் என்பது தெளிவாகிறது. ரஜினிக்கு ஒரு காலா போல் கமலுக்கு ஒரு விஸ்வரூபம் இரண்டாம் பாகம் அமைந்து விட்டது