தி.மு.க தலைமை செயற்குழு கூட்டம் வரும் 14-ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பொதுச் செயலாளர் அன்பழகன். இந்தக் கூட்டத்துக்குக் பிறகு, பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ‘ தலைவராக ஸ்டாலின் பதவியேற்கும்போது, அதற்கு இணையான பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார் அழகிரி. பொதுக்குழுவுக்கு முன்னதாக கட்சிக்குள் அழகிரி சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
ரீ என்ட்ரி!
சென்னை, காவேரி மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் கருணாநிதி இருந்த நேரத்தில், வானகரம் மண்டபத்தில் தி.மு.க பொதுக்குழு நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. கருணாநிதியின் உடல்நலனில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அடுத்து வந்த நாள்களில் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது. தற்போது கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் அதிகாரபூர்வ தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதேநேரம், ‘ குடும்ப உறவுகளுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. ‘அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து, பொதுக்குழுவில் நல்ல பதவியை அவருக்கு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையைப் பிரதானமாக முன்வைத்துள்ளனர் குடும்ப உறவுகள்.
பேராசிரியர் தொடரட்டும்!” தி.மு.க-வில் தலைவருக்கு அடுத்தபடியாக, மிக முக்கியமான பதவிகளாக இருப்பது பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகள்தான். இந்தப் பதவிக்கு அழகிரி மட்டுமல்லாமல் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர். உடல்நலமில்லாமல் இருக்கும் பேராசிரியர் அன்பழகன், கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறார். இதை அறிந்து, அவரது பதவிக்கு கட்சியின் சீனியர்கள் குறிவைத்தபோது, ‘ அவர் இருக்கும் காலம் வரை அந்தப் பதவியில் நீடிக்கட்டும். கலைஞர் போலவே, பொதுச் செயலாளர் பதவியில் அவரே தொடரட்டும். அவரது பதவிக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தினால், கட்சிக்காரர்கள் மத்தியில் வேறுவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்திவிடும். அவர் வேண்டாம் என்று சொன்னாலும், நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். எனவே, அவரிடம் உள்ள பதவியில் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, பொதுச் செயலாளருக்கு இருக்கும் அதிகாரத்தில் சிலவற்றை மட்டும் தலைவர் பதவியோடு இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர்” என விவரித்தார் தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர்,
‘அந்த’ நான்கு பேர்!
” இதில், பொதுக்குழுவுக்கு முன்னதாக கட்சியில் தனக்கான பதவி என்ன என்பதை அறிவதில் ஆர்வத்தோடு இருக்கிறார் அழகிரி. ‘கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களான எ.வ.வேலு, பொன்முடி, நேரு, ஆ.ராசா ஆகியோர் முக்கியப் பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது’ என்பதிலும் அழகிரி உறுதியாக இருக்கிறார். ‘இந்த நால்வரும்தான் அழகிரியின் ரீ என்ட்ரிக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள்’ என அழகிரி தரப்பினர் நினைக்கின்றனர். கருணாநிதியின் கடைசிக் காரியம் நடந்தபோது, ‘மதுரைக்காரரைக் கட்சிக்குள் கொண்டுவந்துவிடுங்கள். இல்லாவிட்டால், உங்களைப் பாதுகாக்க ஆள் இல்லை, கூட இருப்பவர்களை நம்ப வேண்டாம்’ எனக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நோக்கித் தொண்டர்கள் தரப்பில் இருந்து சத்தம் ஒன்று வந்தது. ‘அவர்கள், மதுரையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்’ என நினைத்துக் கவனித்தபோது, ‘விழுப்புரம் பகுதி’ எனத் தெரிந்து அதிர்ந்து போனார்கள் கட்சி நிர்வாகிகள். அந்த அளவுக்கு அழகிரியின் வருகைகுறித்து எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் இருப்பதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
பா.ஜ.க இலக்கு!
அழகிரியை மீண்டும் உள்ளே கொண்டு வருவதில் செல்வி தரப்பினர் உறுதியாக இருக்கின்றனர். இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசிய செல்வி, ‘ அவரை உள்ளே கொண்டு வந்தாக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், உனக்குத்தான் ஆபத்து வந்து சேரும். அழகிரியை பா.ஜ.க கையில் எடுத்துவிட்டால் நிலைமை வேறு மாதிரி சென்றுவிடும். அவருக்கு நல்ல பதவியைக் கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்வது நல்லது’ எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அவருக்குப் பொருளாளர் பதவியைக் கொடுப்பது குறித்தும் குடும்பத்தினர் பேசியுள்ளனர்.
மூன்றில் ஒரு நாற்காலி!
இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின் தரப்பினர், ‘ கட்சியின் முக்கியமான மூன்று பதவிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இருப்பது நன்றாக இருக்காது’ எனக் கூற, ‘ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் முக்கியமான இரண்டு பதவியில் இருக்கக் கூடாது என்றால், அப்பா தலைவராக இருந்தபோது, தம்பி பொருளாளராக இல்லையா.. நீங்கள் தலைவராக இருந்து கொள்ளுங்கள். அழகிரி பொருளாளராக இருக்கட்டும்’ எனப் பதில் கொடுத்துள்ளனர் அழகிரி தரப்பினர். அதாவது, கட்சியின் முக்கியமான மூன்று நாற்காலிகளில் ஒரு நாற்காலியைக் கேட்கிறார் அழகிரி. இதன்மூலம், ‘தலைவருக்கு இணையாக இருக்க முடியும்’ என அவர் நம்புகிறார். ஸ்டாலினும், ‘ தன்னை தலைவராகவும் அடுத்த முதலமைச்சராகவும் ஏற்றுக் கொண்டால், அடுத்தகட்டப் பதவியைக் கொடுக்கலாம்’ என்ற முடிவுக்கும் வந்துவிட்டதாகவும் குடும்பத்தினர் சொல்கின்றனர்.
கனிமொழியின் கலகம்!
பொதுக்குழுவுக்கு முன்னதாக அழகிரி கட்சிக்குள் சேர்க்கப்பட இருக்கிறார். அதன்பிறகு அவருக்கான பதவி குறித்து பொதுக்குழுவில் அறிவிக்க இருக்கின்றனர். இப்போது வரையில் பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்யவில்லை. இன்னும் சில நாள்களில் தேதி அறிவிக்கப்படலாம். அதற்கு முன்னதாக, குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி முடிவு எடுக்க இருக்கிறார் ஸ்டாலின். குடும்பத்தினரின் கருத்துக்களை கழகத்தின் முன்னோடிகளுடன் விவாதித்து இறுதி முடிவை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதேசமயம், ‘கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என சமூகரீதியாக சிலர் பேசி வருகின்றனர். ‘அவரைப் பொருளாளர் பதவியில் அமர வைக்க வேண்டும்’ எனவும் அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனால், ஸ்டாலின் தரப்பில் உள்ளவர்களோ, ‘ மகளிர் அணிப் பொறுப்பிலேயே அவர் நீடிக்கட்டும்’ என நினைக்கின்றனர். அவருக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்” என்றவர்,
“காவேரி மருத்துவமனையில் கருணாநிதி இருந்த காலகட்டத்தில், அழகிரி, கனிமொழி எனக் குடும்ப உறுப்பினர்களுடன் பேசியே அனைத்து முடிவுகளையும் எடுத்தார் ஸ்டாலின். இதன் அடுத்தகட்டமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்க்கச் சென்றது கட்சி நிர்வாகிகளை உற்சாகப்பட வைத்தது. ‘அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்’ என்பதிலும் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின்” என்றார் நிதானமாக.
Credit: Vikatan