“தவழ்ந்தாடும் – தத்தி நடக்கும் – தணலை மிதிக்கும் – விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை… முன்வைத்த காலை பின்வைக்க நினைத்ததுமில்லை! `முரசொலி’ நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற்பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்கச் சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!” – என்று `முரசொலி’ பற்றிச் சொன்னவர் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி. ஆம், அந்த அளவுக்கு `முரசொலி’ நாளிதழை பேணி பாதுகாத்து வந்தார் கருணாநிதி. இந்தநிலையில், காண்போரை நெகிழவைக்கும் சம்பவம் ஒன்றை தி.மு.க தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவர் முதல் குழந்தையாக பாவித்த `முரசொலி’ நாளிதழ் தினசரி வைக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் தினந்தோறும் முரசொலி வைக்கப்பட்டு வருவது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

“முரசொலி நாளிதழ்” – திமுகவின் ‘குட்டி அரசியல் மேடை’! திமுகவின் சமுதாய அரங்கம்!! கருணாநிதியின் மனசாட்சி!!! தமிழ் இன உணர்வை அரை நூற்றாண்டுக்கும் போற்றி வளர்த்த போர்வாள்!!! ரத்தமும்-சதையுமான முரசொலி தன் செல்ல குழந்தையை போல முரசொலியை மார் மீதும், தோள் மீதும் தூக்கி வளர்த்தவர் கருணாநிதி.

பிரசுரம் ஆன முதல் நாளிலிருந்து கடைசி அவர் கண்கள் படாத முரசொலி ஏது? தன் ரத்தமும், சதையுமாய் கலந்து வார்த்தெடுத்த முரசொலிக்காகத்தான் கருணாநிதி தன்னை எப்படியெல்லாம் அர்ப்பணித்து கொண்டார். விடிகாலை காலை 4-30 மணி என்றாலே அது முரசொலிக்கான நேரம் அல்லவா? மழுங்காத வாளின் முனை தந்தையும்-தனயனும் தனிமையில் கொஞ்சி விளையாடும் நேரமல்லவா?

மனத்தாங்கலாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், கற்பனையாகட்டும், கனவாகட்டும், முடிவாகட்டும், எழுச்சியாகட்டும்… எல்லாவற்றையும் கொட்டிவிட உதவிய தோழனல்லவா? திராவிட இயக்கத்தின் போர்வாள் என்றாரே.. அந்த வாளின் முனை ஒருபோதும் மழுங்காமல் பார்த்து கொண்டவர் கருணாநிதிதானே? சமாதியில் முரசொலி தன் ரத்தத்தில் கலந்துபோன முரசொலியை விட்டு கருணாநிதி இன்று பிரிந்துவிட்டார்.

ஆனால் தொண்டர்களால் இந்த பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே… அவர்களால் இந்த ஆதங்கத்தை தணிக்க முடியவில்லையே… கருணாநிதி இல்லாத முரசொலியை கற்பனையில் கொண்டு வர முடியவில்லையே… அதனால்தானே தினமும் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் தினசரி முரசொலியை வைத்து விட்டு வருகிறார்கள்.

கருணாநிதி, கடந்த 7ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நினைவிடத்தில் அவரின் புகைப்படம் அருகே தினமும் `முரசொலி’ நாளிதழ் வைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தில் தினமும் விதவிதமாக அலங்காரங்களுக்கு மத்தியில், முரசொலியை வைக்கும் பணிகளை நினைவிடத்தில் உள்ள தி.மு.க தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக, கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள சந்தனப்பேழையிலும் முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டதது. அத்துடன் அண்ணா அணிவித்த அன்புப் பரிசான மோதிரம் மற்றும் பேனா ஆகியவையும் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது. “இன்றைய செய்தி; நாளைய வரலாறு…” என்பதுதான் `முரசொலி’யின் சங்கநாதம். அது போல் கலைஞர் இறந்த செய்தி, தமிழகத்தின் துயர வரலாறு ஆகிப் போனது. பகுத்தறிவு பல்லிளிக்கிறது. பழங்கள் பூ படைக்கப்படுகிறது. சமாதி சாப்பாடு போடப்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு புத்தகங்களை வைத்து வழிபடுவதை பழித்த பகுத்தறிவுவியாதி கலைஞர் சமாதியில் இப்போது முரசொலி இதழ் வைக்கப்படுவது விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

பகிர்