தி.மு.க. தலைவர் கரு ணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க. புதிய தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தி.மு.க. செயற்குழு கூட்டமும் கூட்டப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வருகிற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி சென்னையில் சுமார் 1 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி கூறி இருப்பதால் தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. தி.மு.க. பொதுக் குழுக் கூட்டம் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தலைவராக தேர்வு செய்யப்படுவார். பொதுச்செயலாளர், பொருளாளர் உள்பட மற்ற பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கிடையே மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்ந்து எடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் பரிந்துரை தீர்மானங்கள் தி.மு.க. மாவட்ட கழக அமைப்புகளில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 63 மாவட்ட நிர்வாக அமைப்புகள் இருக்கின்றன. இந்த 63 மாவட்ட அமைப்புகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களில் பெரும்பாலான மாவட்ட அமைப்புகளில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மதுரையில் உள்ள 3 மாவட்ட அமைப்புகளில் மட்டும் இன்னும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஓரிரு நாட்களில் அந்த மாவட்டங்களிலும் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
நேற்று திருச்சியில் உள்ள 3 மாவட்டங்களிலும் ஸ்டாலினை தலைவராக்க ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு கூறுகையில், “நாங்கள் அனைவரும் தளபதி (மு.க.ஸ்டாலின்) பின்னால் அணிவகுத்து நிற்கிறோம்” என்றார்.
63 மாவட்ட அமைப்புகளிலும் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதால் மு.க.அழகிரியின் ஆள்திரட்டும் முயற்சி, தொடக்க நிலையிலேயே பிசுபிசுக்க தொடங்கியுள்ளது. தி.மு.க.வின் அனைத்து பிரிவு அமைப்புகளும் எந்தவித சர்ச்சையும் இல்லாமல் கட்டுக்கோப்பாக மு.க.ஸ்டாலின் பின்னால் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் செப்.5-ல் நடக்கும் அமைதிப்பேரணிக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். சென்னை பேரணியில் 1 லட்சம் பேரை திரட்டு வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “வரும் செப். 5-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள அமைதிப் பேரணியில் 1 லட்சம் பேர் நிச்சயமாக கலந்துகொள்வார்கள். இப்போதைக்கு என்னை திமுகவில் இணைப்பதாகத் தெரியவில்லை. செப் 5-ம் தேதி பேரணிக்குப் பிறகு தொண்டர்களோடு கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் பெரும்பான்மையான ஆதரவு உள்ளது வெறும் பிம்பம்தானா என்ற கேள்விக்குப் பதிலளித்த அழகிரி, பேரணியைப் பற்றிக் கேளுங்கள், ஊருணி பற்றி கேட்க வேண்டாம்” என்றார்.
இதற்கிடையே அழகிரியின் படத்துடன்கூடிய போஸ்டர்களை மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர். இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, “சென்னை பேரணி குறித்து வெளிப்படையாக எந்த ஆலோசனைக் கூட்டமும் நடக்காது. அதுகுறித்து அழகிரி எங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. சென்னை பேரணிக்கு ஆட்களைத் திரட்டும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
எந்த ஒரு பேரணி நடத்துவதற்கும்,பொது கூட்டம் போடுவதற்கும் பணம் செலவு செய்தால்தான் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாத அழகிரி, ஒரு லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்துவதென்றால் அந்த நிகழ்ச்சிக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய் எந்தவகையில் தனக்கு வந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. மழையில் நனைந்த படடாசு..வெடுக்குதான்னும் பார்ப்போம் என்கின்றனர் சுடலை ஆதரவாளர்கள்.