ஸ்டாலின் வேட்புமனு : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஆக.7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், வரும் 28ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர்.

இதை முன்னிட்டு, இன்று காலை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு தனது வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்றார். பின்னர், கோபாலபுரம் சென்ற ஸ்டாலின், தனது தாய் தயாளு அம்மாவிடமும் ஆசி பெற்றார்.

திமுக தலைவர் தேர்தல் பதவிக்கு போட்டியிடுவதற்காக , இன்று காலை 10 மணிக்கு
அண்ணா அறிவாலயத்தில், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுக்கள் 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். 27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம்.

வரும் 28ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். இதில் திமுக பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவர் வெற்றிபெறுவார்.

இந்நிலையில், தலைவர் பதவிக்கான வேட்புமனுவை ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 65 மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலினுக்கு முன் மொழிந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ராசா, “திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பகிர்