திமுக தலைவர் ஸ்டாலினின் தாயாரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு 9 மணியளவில் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் என்ன காரணத்துக்காக அனுமதிக்கப்பட்டார் என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை. சிகிச்சை முடிந்து அவர் இன்றே வீடு திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

தயாளு அம்மாள் நீண்ட காலமாகவே ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடல் நிலை குன்றியிருப்பதால் பொது விழாக்களில் அவர் கலந்து கொள்வதில்லை. கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் சென்றார். கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார்.

கருணாநிதி மறைவுக்குப் பின்னர், ஸ்டாலின் நேற்று (செவ்வாய்க்கிழமை) முறைப்படி திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஸ்டாலின் தயாளு அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிச் சென்றார். அந்தப் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தயாளு அம்மாளை பார்க்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். மேலும், மதுரையில் உள்ள மு.க.அழகிரி, தயாளு அம்மாள் உடல்நலம்குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.

பகிர்