திருச்சி: திருப்பரங்குன்றம், திருவாரூரில் அமமுகாதன் வெற்றி பெறும். இடைத் தேர்தல் மட்டுமல்ல, லோக்சபா, சட்டசபைத் தேர்தல்களிலும் வெல்வோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருச்சி வந்த தினகரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உண்மையான அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 90 சதவீதம் பேர் அமமுகவில்தான் உள்ளனர். 10 சதவீத நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆட்சி அதிகாரத்துக்காகவும், பதவி சுகத்துக்காகவும் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் உள்ளனர். இந்த ஆட்சி கவிழ்ந்தவுடன் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை தவிர்த்து இதர தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் அமமுகவில் இணைந்து விடுவர்.

யாரோ செய்த சதியாலும், சிலரின் அடிமைத்தனத்தாலும் இரட்டை இலை சின்னம் இப்போது இபிஎஸ், ஓபிஎஸ் வசம் உள்ளது. ஆட்சி அதிகாரத்துக்கு அங்கிருக்கும் நெல்லிக்காய் கூட்டமானது ஆட்சி முடிந்தவுடன் சிதறிவிடும். பின்னர், அமமுகவில் அதிமுக இணையும்.

இதனைத் தவிர்த்து யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. வரும் இடைத்தேர்தல்களிலும் குக்கர் சின்னம் மகத்தான வெற்றியை பெறுவது உறுதி. மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

அமமுக கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வருவதே அதற்கு சாட்சி. ஆனால், இந்த கூட்டத்தை அழைத்து வரப்பட்ட ஒரே கூட்டம் என ஆளும்கட்சியின் உளவுப் பிரிவு மூலம் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். கூட்டம் நடந்தால் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் வருவது வழக்கம். நிர்வாகிகளை தவிர உள்ள தொண்டர்கள் மற்றும் மக்கள் தானாக வந்து ஆதரவு அளிக்கின்றனர் என்றார் அவர் தினகரன்.

பகிர்