18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3 வது நீதிபதி முன் கடந்த மாதம் 23-ல் தொடங்கிய இறுதி வாதம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் மூன்றாவது நீதிபதி.
தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களும் செயல்பட்டதாக மற்றொரு எம்எல்ஏவான ஜக்கையன் அளித்ததாக கூறப்படும் புகார் தொடர்பான ஆவணங்களைத் தங்களுக்கு பேரவைத் தலைவர் அளிக்கவில்லை.
18 எம்எல்ஏக்களும் ஆட்சிக்கு எதிராக எந்த இடத்திலும் கருத்து தெரிவிக்கவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. உள்கட்சி விவகாரம் எனும்போது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமேயன்றி தகுதி நீக்கம் செய்ய முடியாது’’ என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்து பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், ‘‘உட்கட்சி பிரச்சினைகளை மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்லக்கூடாது. ஒருவேளை ஆளுநர் இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் முடிவுகள் விபரீதமாகியிருக்கும். இதிலிருந்தே 18 பேரும் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. முதல்வரை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன், வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் மட்டும் வாதிட நீதிபதி அனுமதி அளித்தார். அன்றுடன் வாதங்கள் நிறைவுபெற உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று 18 பேர் தரப்பு இறுதி பதில் வாதத்தில் கொறடாவின் புகாரிலும், சபநாயகரின் உத்தரவிலும் அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணையில் உள்ள தகுதி நீக்கத்துக்கான காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகர் தரப்பு இறுதி பதில் வாதத்தில் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்துடனேயே 18 பேரும் ஆளுநரைச் சந்தித்ததாகவும், ஆதாரங்கள் ஆவணங்கள் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தது தவறு இல்லை என்றும் கூறப்பட்டது.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்தால், ஆட்சியைக் கலைக்காமல் முதல்வரை மட்டும் மாற்றிவிட்டு ஆட்சியை தொடரச் செய்வோம் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்க. தமிழ்ச்செல்வன் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கோரினேன். தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்தால், ஆட்சியைக் கலைக்காமல் முதல் வரை மட்டும் மாற்றிவிட்டு ஆட்சியை தொடரச் செய்வோம் என்றார்.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு நல்லவிதமாக வரும். அப்போது இந்த ஆட்சிக்கு முடிவு வரும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் குக்கர் சின்னத்துக்கு கிடைத்த வெற்றி திருவாரூர், திருப்பரங் குன்றம் தொகுதிகளிலும் பிரதி பலிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் ஆறு, குளங்களைத் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி ரூ.600 கோடி, தண்ணீரோடு போய்விட்டது. கருணாநிதி புகழஞ்சலி கூட்டத் துக்கு வர பாஜக தலைவர் அமித் ஷா மறுத்துவிட்டதால், விரக்தியில் ஸ்டாலின் காவிமயத்தைப் பற்றிப் பேசி வருகிறார்” என்றார்.