அரசு பணி, பணிமாறுதல் உத்தரவுகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சோதனையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியுள்ளது.
2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் வசித்துவரும் அரசு இல்லம் மற்றும் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடு உள்ளிட்ட 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அச்சோதனையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா கணக்கு உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சோதனைக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிந்த நிலையில், சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மேல்நடவடிக்கை எடுக்கக்கோரி, வருமானவரித்துறை தமிழக அரசுக்கு விரிவான அறிக்கைகளை அனுப்பியுள்ளது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 20 லட்சம் ரூபாயில் 12 லட்சத்து 96,000 ரூபாய் 28 கவர்களில் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கவர்களில் சத்துணவுத்து திட்டத்தின் கீழ் அரசு பணிக்கான நேர்முகத்தேர்வு கடிதம், செவிலியர் இடமாற்றத்திற்கான உத்தரவுகளுடன் லஞ்சப்பணமும் இருந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து சோதனையில் சிக்கிய லஞ்சப்பணம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணையில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மேலும் அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்கிறது வருமானவரித்துறையின் கடிதம்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பான வருமானவரித்துறை அதிகாரிகளிடம், தனது தந்தையின் வாக்குமூலத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையடுத்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ஜெ.ஸ்ரீனிவாசன் என்பவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சோதனையின்போது ஜெ.ஸ்ரீனிவாசன் பயன்படுத்திய இமெயிலிருந்து பணம் வசூல் தொடர்பாக இரண்டு ஆவணங்கள் மீட்கப்பட்டதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. 9 பக்கங்கள் கொண்ட அந்த வரவு செலவு கணக்கு அறிக்கையில், அமைச்சரின் உதவியாளர்கள்/ தனிப்பட்ட நபர்கள் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பாக பணம் வசூல் செய்ததாக அக்கடிதம் சொல்கிறது.
2016-ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில் 20 கோடியே 75 லட்சத்து 91,500 ரூபாய் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 20.75 கோடி ரூபாய், தமிழகத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிகள் மற்றும் பாரமெடிக்கல் படிப்புகளுக்கு அனுமதியளிக்க பெறப்பட்ட லஞ்சம் என்கிறது வருமானவரித்துறை.
மற்றொரு அதிர்ச்சியான முறைகேட்டையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை திருவேங்கைவாசல் கிராமத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் குபேந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான 4.91 ஹெக்டேர் பரப்பளவில் கல்குவாரி செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கனிவளத்துறை, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அனுமதிக் கடிதத்தின்படி, தரை மட்டத்திலிருந்து 43 மீட்டர் வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி, சுமார் 72 மீட்டர் ஆழத்திற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனுமதியின்படி, 2,95,642 கனமீட்டர் அளவிலான கற்களை வெட்ட அனுமதி பெற்றுவிட்டு விதிகளை மீறி, 25 லட்சத்து 51,868 கனமீட்டர் அளவு வெட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்டதைவிட 850% கற்கள் சட்டவிரோதமாக அதிகளவு வெட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் ஆதாரங்களுடன் அம்பலப்படுவது இது இரண்டாடாவது முறை. ஏற்கனவே குட்கா வழக்கில் புறநகர் பகுதிகளில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் விஜயபாஸ்கர் கோடிக்கணக்கில் பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
உயர்நீதிமன்றம் அறிவுரையின் அடிப்படையில், விஜய்சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படத்தை பார்த்து ட்ரோன் கேமரா எனப்படும் (ஆளில்லா விமானம்) உள்ளிட்ட கருவிகளைக்கொண்டு மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேட்டை உறுதிப்படுத்தியதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பம் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், அரசு பணிகள், பணியிட மாற்றம் பெற்றுத்தர அமைச்சரின் தந்தை லஞ்சம் பெற்றதை ஒப்புகொண்ட விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாகயுள்ளது.
இது போன்ற தொழில்நுட்ப தந்திரங்கள், தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக அடிமைகளை ஓரம்கட்ட டிஜிடல் இந்தியா திட்டத்தில் மோடியின் கைவண்ணம் என தெரியவந்துள்ளது. கருணாநிதியின் நினைவேந்தலுக்கு அமித்ஷா அழைக்கப்பட்டு பின்னர் அரசியல் நாகரிகம் என சப்பைக்கட்டு கட்டி திமுக பாஜக ரகசிய கூட்டணி வெளிச்சத்துக்கு வந்தது நினைவிருக்கலாம். மேலும் ஸ்டாலின் இல்லாவிட்டாலும், ரஜினி கமல் இருவரில் ஒருவரை வைத்து பின்வாசல் வழியே தமிழகத்திற்குள் நுழையலாம் என பாஜக திட்டமிட்டுள்ளதாக கப்சா நிருபர் தெரிவித்தார்.