தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நாளை மாலை நடக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி பெரும்புதூரில் மனித வெடிகுண் டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ் உள் ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனை வருக்கும் பூந்தமல்லி தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தனர். இதில் முருகன், நளினி, பேரறி வாளன், சாந்தன் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட் டது. ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்பிறகு, கடந்த 2000-ம் ஆண் டில் நளினியின் மரண தண்டனையை யும் 2014 பிப்ரவரி 18-ம் தேதி பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையையும் உச்ச நீதிமன் றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்நிலையில், அப்போதைய முதல் வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் மாளின் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க அமைச்சரவையைக் கூட்டி ஜெயலலிதா முடிவெடுத்தார். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன் றத்தை அணுகியது. இதையடுத்து, அவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்ற மும் இடைக்காலத் தடை விதித்தது.

இதன்பின்னர், கடந்த 2016-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி னார். ஆனால், மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 23-ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 7 பேர் பற்றிய அனைத்து விவரங்களையும் குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப் பியது.

ஆனால், தமிழக அரசின் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் நிராகரித்தார்.

அதன் பின்னர், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணையின்போது, மத்திய அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம். அதை பரிசீலித்து முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது’’ என்று உத்தர விட்டனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம். தற்போது உச்ச நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு விவரங்களைப் பெற்று, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார்’’ என்றார்.

இந்த விவகாரத்தைப் பொறுத்த வரை, சட்ட நிபுணர்களுடன் முறைப்படி ஆலோசனை நடத்தி, அமைச்சரவை யைக் கூட்டி முடிவெடுத்து, தீர்மான மாக நிறைவேற்றி ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்பது மரபு. பின்னர், அந்த தீர்மானத்தை ஆளுநர் பரிசீலித்து தனது இறுதி முடிவை அறிவிப்பார்.

இந்நிலையில், தமிழக அமைச் சரவை கூட்டம் வரும் 9-ம் தேதி (நாளை) நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி தலைமை யில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக் கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட லாம் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, தற்போது குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ தனது நட வடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உட்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்துறைச் செயலருக்கு மனு

இந்நிலையில், வேலூர் சிறையில் நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

முருகன், சாந்தன், நளினியை சந்தித்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அவர்கள் 3 பேரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நளினி தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு 7-ம் தேதி வாபஸ் பெறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி, முருகன், சாந்தன் ஆகிய மூவரும் சிறை கண்காணிப்பாளர் வழியாக தமிழக உள்துறை செயலருக்கும் ஒரு மனு அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்