புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தினசரி கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை எகிற தொடங்கியது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் 84 ரூபாய் 49 காசுகள் என்று இருந்தது. நேற்று மீண்டும் லிட்டருக்கு 36 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 85 காசுகள் என விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலை ஏற்றத்தால் பெட்ரோல் விலை ரூ.85-ஐ தாண்டிவிட்ட நிலையில் வாகனஓட்டிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில்,  யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  சமீபத்தில் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாபா ராம்தேவ் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு சில வரிச்சலுகளுக்கு அனுமதி அளித்தால் இந்தியா முழுவதும் ரூ.35-40க்கு பெட்ரோல் மற்றும் டீசலை வழங்க தயார். எரிப்பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். தொடர் விலை உயர்வு மோடி அரசை கடுமையாக பாதிக்கும். அவர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ” நான் பணத்தை தேடி ஓடவில்லை, பணம் என்னை தேடி வருகிறது. அரசியலில் இருந்து நான் விலகிவிட்டேன்.  நான் எல்லா கட்சியிலும் இருப்பேன், ஆனால், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. சிலர் பசுக்களை மத ரீதியாக பார்க்கின்றனர். பசுவிற்கு என்று மதம் கிடையாது
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், பாபா ராம்தேவ் இவ்வாறு கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பகிர்