எச்.ராஜா என்ன திருவாய்மொழி உதிர்த்தாலும் அதை கண்டும், காணாமல் போவதுதான் மத்திய, மாநில பாஜகவின் போக்கா என தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தை மிகவும் கொச்சையாக வசைபாடியுள்ளார். கூடவே தமிழக காவல் துறையினரையும் மிகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அமைச்சர் ஜெயக்குமார் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் ராஜாவுக்கு எதிர்ப்பைதான் பதிலாக அளித்து வருகிறார்கள்.

ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

"ஹைகோர்ட்டாவது? ****ஆவது" – ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சுவீடியோ: https://tamil.news18.com/news/tamil-nadu/h-rajas-filty-comments-on-highcourt-gets-viral-53145.html

Posted by News18 Tamil Nadu on Saturday, September 15, 2018

ஆனால் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இப்போது வரை மவுனம் காப்பது பாஜகதான். மாநில பாஜகவும் சரி, மத்திய பாகவும் சரி இதுவரை எச்.ராஜா பேசும் தகாத வார்த்தைகளுக்கும், அபத்தமான, அபாண்டமான ட்விட்டர்களுக்கும், நாகரீகமற்ற செயலுக்கும் இதுவரை கண்டனங்களை செய்தது கிடையாது. சொல்லப்போனால் ராஜா இதுவரை தமிழகத்தில் பேசிய பேச்சுக்களுக்கு எல்லாம் அவரை பாஜக தலைமை தாமாக முன்வந்து டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். அல்லது நாம் எந்த பதிவு, கருத்தை சொன்னாலும் இப்படி தமிழக மக்கள் ரவுண்டு கட்டி அடிக்கிறார்களே என்று நினைத்தாவது எச்.ராஜா தார்மீக அடிப்படையில் பதவியை விட்டு போயிருக்க வேண்டும்.

மற்ற விஷயங்களில்தான் பாஜக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் என்பது மரியாதைக்குரிய, வணக்கத்திற்குரிய ஒரு துறை ஆகும். ஒரு நீதித்துறையை இவ்வளவு கொச்சையாக யாராலும் கேவலப்படுத்தவே முடியாது. ஆனால் பாஜகவின் மாநில, மத்திய தலைமை ஏன் வாய் மூடி இருக்கிறது? எதிர்கட்சி, எதிர் முகாம் மீது கருத்து மாறுபாடுகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள் இருந்தாலும் நாகரீகமான நடவடிக்கைகளில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை உணர்வு கூட அற்றவர்களாக இருக்கும் இந்த செயலை எப்படி கண்டும், காணாமலும் இருக்க தலைமையால் முடிகிறது?

தமிழகத்தில் நல்ல மாதிரியாக சென்று கொண்டிருந்த அரசியல் நாகரீக களம் தற்போது தடம் மாறி பயணித்து கொண்டிருப்பதற்கு மூல காரணம் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் போன்ற இந்துத்துவா அமைப்புகளே என்பதை மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக கண்டும், உணர்ந்தும்தான் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு இத்தகைய வன்முறை சம்பவங்களும், அநாகரீக அரசியல் வார்த்தைகளும், இந்தியா முழுவதும் படர ஆரம்பித்துவிட்டது.

இது தற்போது தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதை தமிழகத்தில் துவக்கி வைத்தவர், பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியே. கேலி-கிண்டல் என்ற பாணியில் இவர், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு, இறுதியில் அது தன் சொந்த கருத்து சொல்ல தொடங்கினார். நேற்று முதல் ராஜாவின் பேச்சு வைரலாகி வர ஆரம்பித்துவிட்டது. நெட்டிசன்கள் அவரது பேச்சை தாறுமாறாக கிழிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழக மக்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனாலும் ராஜாவை எதிர்க்காமல் தலைமை தயங்குகிறது என்றால், அவர் மீதான பயம் காரணம் என்று எடுத்து கொள்ளலாமா? பாஜகவை சேர்ந்த ஒரு தலைவரும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? ராஜா கருத்தை அனைவருமே ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா? அல்லது இப்படி பேசி தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி மக்களை துண்டாட வேண்டும் என்ற அசைன்மெண்ட் ராஜாவுக்கு தரப்பட்டிருக்கிறதா?

எப்படி இருந்தாலும் சரி, எதுவானாலும் சரி, பாஜகவின் இந்த போக்கு கண்டனத்துக்குரியதுதான். முதலில், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த அரசியல்வாதிகள், ‘பண்பு மறந்து, வார்த்தை தடித்து’ அவதூறுகளை வீசுவதை இனி நிறுத்திக் கொள்வதுடன், இத்தகைய சூழல் இனி ஒருபோதும் வராமல் தடுப்பதும் தமிழக பாஜக அரசியல் தலைவர்களின் பொறுப்பேயாகும். இனியும் ராஜா இவ்வாறு பேசுவதும், அதற்கு பாஜக தலைமை ஒத்து ஊதியும் வந்தால், அது நமது முன்னோர்களின் தியாகத்தை அவமதிப்பது போலாகும் என்பதை உணர வேண்டும்.

முன்னதாக லெனின் சிலைகளைப்போல் பெரியார் சிலைகளை நீக்க வேண்டும் என்றார். நடிகர் விஜய் மெர்சல் திரைப்பட வெளியீட்டின் போது, ‘ஜோசப்’ விஜய் என்று கிறிஸ்தவ மதத்தினை இழிவு படுத்தினார். முஸ்லிம் நிறைந்த பகுதி எப்போதும் கலவர பூமி அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று எப்போதும் கூறிவருகிறார்.

இதற்கிடையே, திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர். அவர்களின் மீது சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எச். ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக ஆய்வாளர் மனோகரன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது பெட்ரோல் விலை ஏற்றத்தில் உண்டான சர்ச்சையை மடைமாற்ற பாஜக தூண்டிவிட்டுள்ள ஆயுதம் தான் எச்.ராஜா என்ற விஷக்கிருமி. குட்காவழக்கில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் காவல் துறையை களங்கப்படுத்தியதால் கொதித்துக் கொண்டிருக்கும் போலீசார், காவல் துறையை சேர்ந்த பெரியபாண்டியனை வெளிமாநிலத்தில் வைத்து தன்கவுண்டரில் கொன்றதுபோல் எச். ராஜாவையும் தந்திரமாக போட்டுத்தள்ள திட்டம் தீட்டி வருவதாக நம்பத்தகாத ரகசிய போலீஸ் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பகிர்