சென்னை: பாமகவின் அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கிய சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது. அதுதான் நடிகர் ரஞ்சித்திற்கு முக்கிய பொறுப்பினை வழங்கியதுதான்.
1993-ம் ஆண்டு வெளியான `பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ரஞ்சித், சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கும் ரஞ்சித், `ஏழையின் சிரிப்பில்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி பாமகவில் இணைந்தார். இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் அவரை சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாமகவின் மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த ரஞ்சித், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராகவும் வலம் வந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு துணை முதல்வர் ஓபிஎஸ் அணியினருக்கு நடிகர் ரஞ்சித் ஆதரவு தெரிவித்திருந்தார். ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் இணைப்புக்கு பிறகு அதிமுகவில் பெரிதாக செயல்படாமல் இருந்த ரஞ்சித், தற்போது பாமகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி கலாச்சார சீரழிவை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என பாமக கூறிவந்ததோ அதேபோலதான், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதையும் கூறிவந்தது. ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கும்போதுகூட வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் ராமதாஸ் திட்டினார். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு எதற்கு வர வேண்டும் என்று சாடினார். அதனாலேயே தேமுதிக எனும் கட்சி ஆரம்பிக்கப்பட்டது பாமகவுக்கு எதிரானது என்றுகூட பேசப்பட்டது. அதற்கேற்ற மாதிரியே, வன்னியர்களின் ஓட்டுக்கள் முதல்முறையாக பாமகவிலிருந்து தேமுதிகவிற்கு வந்து விழுந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இப்படித்தான் ரஜினிக்கும் கூறினார். போன ஜனவரி மாதம்கூட ஒரு பேட்டியில், “எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது. அவர்களின் அரசியல் கனவு, வெறும் கனவாக தான் இருக்கும். தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நடிகரின் அரசியலை மக்கள் ஏற்கமாட்டர்கள்” என்று டாக்டர் ராமதாஸே கூறினார்.