கருணாஸை தேடி நெல்லை போலீஸார் சென்னை வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாஸ் கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் அவரை கைது செய்ய நெல்லை போலீஸார் நேற்றிரவு சென்னை வந்தனர். பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் இல்லாததால் போலீஸார் திரும்பி சென்றனர். இதிலிருந்து கருணாஸை அதிமுக அரசு கட்டம் கட்ட தொடங்கிவிட்டது நன்றாகவே தெரிகிறது.
கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை கருணாஸ் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த இரு வழக்குகளில் இருந்தும் அவருக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளதால் எடப்பாடி அரசின் பார்வை கருணாஸுன் பக்கம் திரும்பியுள்ளது.
மேலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கருணாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பாயவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கருணாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பான மருத்துவச் சான்றுகளை வழங்கினர். நேற்றிரவு முதலே நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் அவதிபட்டு வந்ததால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் தகவல் தெரிவித்து உள்ளார். நெல்லையிலுள்ள வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரிய மனு நிலுவையில் உள்ளதாக வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கப்சா நிருபர் விசாரித்ததில், ஓவராக ஊளையிட்டால் இந்த கதிதான். படத்தில் நடிக்கும்போது விடும் டயலாக் மாதிரி மேடையில் பேசினா இப்படித்தான். நாவடக்கம் தேவை. மேடையில் ஒரு நாள் ஊளையிட்டால் மீடியா அட்டென்ஷன் கிடைத்துவிடும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். என்றார்.