குற்றாலம்: டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 13 பேர் முகாமிட்டிருக்கும் குற்றாலம் மினி கூவத்தூர் போல காட்சி தருகிறது. சரக்கு-சைடு டிஷ் கரைபுரண்டு குற்றாலம் அருவியாகக் கொட்டுகிறது.
தமிழக அரசியல் தற்போது பரபரப்பான சூழல் உச்சத்தை எட்டியுள்ளது. அமைச்சர்கள், டிஜிபி ஊழல் விவகாரங்கள் ஒன்றுமே இல்லாமல் அடங்கி போய், பிறகு ரெட் அலர்ட் மழையால் இடைத்தேர்தலும் புஸ்வாணம் ஆகி, அமைச்சரின் ஆடியோ பேச்சு அடங்கிய சூட்டை கிளப்பிவிட.. தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் குளுகுளுவென குவிந்து மினி கூவத்தூர் ஆக்கி விட்டார்கள்!
18 எம்ஏல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு இன்றைக்கோ, நாளைக்கோ என்றிருக்கிறது. ஏற்கனவே இடைத்தேர்தல் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதால், கொதித்து போய் காணப்பட்ட டிடிவி தினகரன் நேராக பெங்களூர் போனார்.. சிறையில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார், திரும்ப சென்னை வந்து தனது ஆதரவாளர்களுடன் ஒரு குட்டி ஆலோசனையை போட்டார். தொடங்கியது குற்றாலம் டூர்.
குற்றாலம் ரிசார்டில், ‘தீர்ப்பு சாதகமாக அமைய வேண்டும் ஆண்டவா’ என்று வேண்டி தாமிரபரணியில் எல்லோரும் தலைமுழுகினர். குற்றாலத்தில் முகாமிட்டுள்ள இவர்கள் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். முதலில் பழைய குற்றாலத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.
பழைய குற்றாலத்தில் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, இப்போ ஐந்தருவி ரிசார்ட்டுக்கு மாறி இருக்கிறார்களாம். இன்னைக்கு பூரா இந்த ஐந்தருவி ரிசார்ட்தான் போல…இந்த ஐந்தருவி ரிசார்ட்டும் இசக்கி-க்கு சொந்தமானதுதானாம். இவர்கள் 13 பேர் தவிர மேலும் பல எம்எல்ஏக்களும் ரிசார்ட்சுக்கு வந்து கொண்டிருக்கிறார்களாம். இப்போது குற்றாலத்தை பார்ப்பதற்கு மினி கூவத்தூர் போலவே இருக்கிறதாம்.
ஒரு பக்கம் செய்தியாளர்கள் குவிந்துள்ளனர். பொதுமக்களும் வேடிக்கை பார்த்தபடி உள்ளனர். தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் வாக்கிங் போகும் காட்சிகளும் காலையில் அரங்கேறுகிறது. ஒரே பரபரப்பாக காணப்படுகிறது ரிசார்ட்டுக்கு உள்ளேயும் வெளியேயும். இதில் டிடிவியும் வர்ற போறாராம். அப்போது வெத்திலைப்பெட்டியுடன் நடிகர் கருணாசும் அங்கு செல்வார் எனவும் திமுக-திருமங்கலம் பார்முலா 20ரூபாய் டோக்கன் டெக்னிக், கூவத்தூர் பார்முலா போன்றவற்றிற்கு காப்புரிமை (Patent) வாங்க டிடிவி முனைப்பு காட்டுவதாக நம்பத்தகாத அமமுக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.