நடிகர் சிவகுமார் மதுரையை சேர்ந்த வாலிபருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள புது செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மையத்தை திறந்து வைக்க சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகன் ராகுலின் செல்போனை தட்டிவிட்டார் சிவகுமார். தனது செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

சிவகுமாரின் செயலை பார்த்த மக்கள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய நிலையில் அவர் வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவித்தால் போதுமா அந்த செல்போனை வாங்க அவர் ஒரு மாத சம்பளத்தை செலவு செய்திருப்பார். உடைந்த செல்போனுக்கு பதிலாக புதிய செல்போன் வாங்கித் தருவாரா சிவகுமார் என்று நெட்டிசன்கள் கேட்டனர்.

வருத்தம் தெரிவித்ததோடு நிற்காமல் அந்த வாலிபருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார் சிவகுமார். அந்த வாலிபர் புதிய செல்போனை பெறும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சிவகுமார் செல்போனை தட்டிவிட்டதை பார்த்து கோபம் அடைந்து அவரை திட்டி, கலாய்த்து மீம்ஸ் போட்டவர்கள் தற்போது அவர் செய்துள்ள காரியத்தால் பாராட்டியுள்ளனர்.

“சிவகுமார் அவர்கள் சும்மா ஒன்றும் வாங்கித்தரவில்லை, ஏற்கனவே அவர் ரசிகர் வைத்திருந்த போனை தட்டிவிட்டு உடைத்து விட்டார் சிவகுமார், அந்த உடைந்த போனுக்கு பதிலைத்தான் இந்த புதிய போனை அந்த ரசிகருக்கு வாங்கித்தந்துள்ளார், அள்ளியும் கொடுக்கவில்லை! கிள்ளியும் கொடுக்கவில்லை!! கொடுக்க வேண்டியதைத்தான் கொடுத்துள்ளார் இந்த சிவகுமார் அவர்கள். கருத்தரிப்பு மைய திறப்புக்கென்று சில லட்சங்களாவது வாங்கியிருப்பார். அதில் ஒரு சிறு பகுதி காசில் செல்போன் வாங்கிக்கொடுத்து, இழந்த ‘மானத்தை’ மீட்டெடுக்க முயற்சித்துள்ளார். செல்போனை தட்டிவிட்டால் சிவகுமார் புது போன் வாங்கித் தருவார் என்பது தெரிந்தால் என் போனை அவர் முன்பு நீட்டி உடைத்திருக்கலாமே என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். ஆசை தான்.. இனிமேலாவது நாய் காலை தூக்குவதுபோல் சினிமாக்காரனை கண்டதும் செல்லை தூக்காமல் திருந்தி வாழுங்க” என்கிறார் நமது கப்சா நிருபர்.

பகிர்