தமிழில் வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்தாவிட்டால், அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக மாணவர்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் தொடங்க இருக்கும் நிலையில், பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும். எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்கு தனியாகவும், தமிழுக்கு தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழி பெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும். தேர்வாணைய அதிகாரிகள் கூறுவதைப்போல ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால், இதைக் கூட செய்வதற்கு முன்வராமல் ஆங்கிலத்திலேயே வினாத்தாள் வழங்குவது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும். ‘கயிதை, கஸ்மாலம்’ என கலீஜ் தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம். எனவே, சொத்தைக் காரணங்களைக் கூறி ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு பதிலாக, அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டாம் தொகுதி முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள் முழுமையாக தமிழில் தயாரிக்கப்படாவிட்டால் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து, தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டவுடன் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படாவிட்டால் பாட்டாளி வேலைவெட்டி அற்ற மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழை வளர்க்கிறோம் என அறுபதாண்டுகளாக ஏமாற்றிய திராவிட கட்சிகள் முகத்திரை கிழிந்துள்ளது. செம்மொழி அந்தஸ்து வாங்கிய தமிழில் ஒரு கேள்வித்தாள் மொழி பெயர்க்க ஆள் இல்லை என்பது வெட்கக்கேடு. பாஜக ஆளும் குஜராத்தில் பட்டேல் சிலை வளாகத்தில் Statue of Unity என்ற வாசகத்தை ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என தெள்ளுதமிழில் எழுதிய மொழிபெயர்ப்பாளரை கேட்டால் செய்து தரப்போகிறார். அது தவிர மரம் வெட்டும்போது எழுப்பும் ‘ஏலேலோ ஐலேசா’ போன்ற வாக்கியங்கள், வடசென்னை படத்தில் ரசிகர்களை கவர்ந்த கெட்ட வார்த்தைகள் கேள்வித்தாளில் தவறாமல் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.. இதை அறிந்த சில தமிழறிஞர்கள் நெஞ்சுவலியில் துடித்ததாக நம்பத்தகாத செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.