சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். மெர்சலை தொடர்ந்து தற்போது சர்கார் படமும் பிரச்சனையை சந்தித்து இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு அடுத்து விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.

இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது. தமிழகம் முழுக்க படத்திற்கு எதிராக போராட தொடங்கி உள்ளது.

சர்கார் படத்தால் அதிமுகவினர் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவின் திட்டங்கள் குறித்தும், அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த படத்தை அதிமுக எதிர்க்க முக்கிய காரணம்.

முதலில் மதுரையில்தான் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராட தொடங்கியது. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரையில் சர்கார் படம் வெளியாகி இருக்கும் நிறைய தியேட்டர்கள் முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் சினிப்பிரியா தியேட்டர் காலையில் முற்றுகையிடப்பட்டது. மதியமும் படம் பார்க்க வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மதுரை அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்குள்ள சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் சர்காருக்கு எதிராக கோவையிலும் போராட்டம் நடக்கிறது. கோவையில் சாந்தி தியேட்டரில் போஸ்டர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி தியேட்டர் உள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு வந்த விஜய் ரசிகர்கள் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதாவது சர்கார் படம் வெளியாகி இருக்கும் அனைத்து தியேட்டர்களின் முன் நின்று போராட்டம் நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். சர்கார் படத்தை யாரையும் பார்க்க விடாத அளவிற்கு அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க விஜய் – முருகதாஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆம் அதிமுக அரசு சர்கார் குழு மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதிகபட்சம் வழக்கு தொடுக்கும் நிலை வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இன்றோ நாளையோ இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய, காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

குறிப்பாக, அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை மக்கள் தீக்கிரையாக்குவது போன்ற காட்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மறுபக்கம், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, சர்கார் படத்து கதையை விமர்சனம் செய்துள்ளார். இப்படி, ஆள்வோரை கோபப்படுத்தும் அளவுக்கு சர்கார் திரைப்படத்தில் அப்படி என்னதான் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஆள்வோரை கோபப்படுத்தும் அளவுக்கு பல குறியீடுகள் மறைமுகமாக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், போலீஸ் தடியடி காட்சி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் தற்கொலை செய்த சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

“கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குடும்பம் தீக்குளித்ததும், தீயணைப்பு வண்டியை கொண்டு வந்து நிறுத்தினார்கள். தீக்குளிக்க கூடாது என நினைத்திருந்தால் கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இங்கே (கலெக்டர் அலுவலகத்தில்) தீக்குளித்துவிட கூடாது என்று நினைத்ததால் தீயணைப்பு வண்டியை நிறுத்தினார்கள்” என படத்தில் ஒரு வசனம் வருகிறது.

தீக்குளிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தப்பி பிழைத்த குழந்தையின் முகம் சிதைந்து காணப்படும். அதை பார்க்கும் விஜய் கதாப்பாத்திரம், இப்படித்தான் தமிழகமும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் பொறுப்பு கிடையாது என்று கூறி, வரிசையாக ஒவ்வொரு துறையாலும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் தனது தாயிடம் காண்பிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பெரும் புயலை வீசச் செய்த கண்டெய்னர் லாரி பணம், ஆளும் கட்சிக்கு சொந்தமானது என்பதை போலவும், இதை மூடி மறைக்க சாட்டை டாட் காம் என்ற வெப்சைட் பத்திரிகையாளரை முதல்வர் கொலை செய்வது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இலவசம் கொடுப்பது, வாக்குக்கு பணம் கொடுப்பது, முதல்வராக உள்ளவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை செல்லும் சூழல் உருவானதும், அவரை உடனிருக்கும் நம்பிக்கையான மகளே கொலை செய்து மக்களிடம் அனுதாபம் பெற்று, தானே முதல்வராக முயல்வது போன்றவையெல்லாம், எதன் எதன் குறியீடு என்பது சம கால அரசியல் தெரிந்தவர்களுககு புரிந்திருக்கும்.

வில்லி கதாப்பாத்திரமான வரலட்சுமிக்கு, கோமளவள்ளி என பெயர் சூட்டியிருப்பது, சற்குணம் ஐஏஎஸ் என முதல்வர் வேட்பாளராக ஒருவரை விஜய் முன்மொழிவது என்பது போன்றவை, ‘பெயர் அரசியல்’. இவை எல்லாமே, சமகால அரசியலோடு ஒத்துப்போவதுதான், இப்போது படத்திற்கு எதிரான பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

“விஜய் படம் சர்க்காரில்தான் அரசியல் காட்சிகள் உள்ளதா? பழைய படம் பராசக்த்தி தொடங்கி, ஆண்டு தோறும், மாதம்தோறும் அரசியல் அடாவடிகள், தில்லு முள்ளுக்களை அம்பல படுத்திதான் வருகிறது சினிமா! அது சரியில்லை, இது சரியில்லை, என்னோடு, எங்களோடு இந்தக் கதை தொடர்பு படுத்தி எடுக்க பட்டுள்ளது என்றால், எந்த படமும் எடுக்க முடியாது. புடிச்சா பாரு, இல்லாவிட்டால் கம்முனு போவதுதான் சரி. முதல்வர் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு செல்வதுபோன்ற காட்சி “முதல்வன்” திரைப்படத்திலேயே வந்தது!

அதற்காக அந்த கதாநாயகனை யாரும் அரசியல்வாதியாக ஏற்கவில்லை என்பதுதான் உண்மை! ‘ரமணா’படத்தில் ஊழல்வாதிகளை ஒழித்து தமிழ்நாட்டில் தேனும் பாலும் ஓடவைத்தார் ஒரு கதாநாயகன் அவரை மக்கள் ஏற்றார்களா? என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே! ஆனானப்பட்ட சிவாஜி கணேசனையே புறந்தள்ளி விட்டனர் மக்கள்! நம்மை பொறுத்தவரை,MGR -க்கு பின், ‘திரைப்பட காட்சிகளில் ஒன்றி போய் பொது வாழ்விலும் தலைவராக இதுவரை மக்கள் யாரையும் ஏற்கவில்லை’ என்பதுதான் உண்மை! மற்றபடி பெருந்தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில்,தமிழக அரசியலின் போக்கு எவ்வாறு செல்கிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்!” என்கிறார் கப்சா நிருபர்.

பகிர்