சென்னை விமான நிலையத்தில் நேற்று பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் குறித்தும், பாஜக குறித்தும் ரஜினிகாந்த் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. 7 பேர் என்றால் யார் என்று கேட்ட ரஜினிகாந்த், எதிர்க்கட்சிகள், பாஜகவை ஆபத்தான கட்சி என்று கூறினால், அப்படித்தானே இருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்தார்.

இதனிடையே, போயஸ் இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் கூறியதாவது: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் பற்றி ரஜினிகாந்த்துக்கு தெரியாது என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். தெரியும் என்றால் தெரியும் என்பேன், தெரியாது என்றால் தெரியாது என்பேன். இதில் வெட்கம் இல்லை. பேரறிவாளனிடம் 10 நிமிடம் போனில் பேசி ஆறுதல் கூறியவன்தான் இந்த ரஜினிகாந்த். இந்த வழக்கு பல நீதிமன்றங்களுக்கு சென்று வந்துள்ளது. 27 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். போதும். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

எல்லா கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்க ஒன்றாக சேர்ந்துள்ளார்களே, அந்த கட்சி அவ்வளவு ஆபத்தான கட்சியா என்று கேட்டனர். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்து கொண்டுள்ளார்கள். அப்படியானால் பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே? பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்வார்கள். பத்து பேர் சேர்ந்து ஒருவரை (மோடியை) எதிர்த்தால் பலசாலி ஒருவரா பத்து பேரா என்று பொடி வைத்து பேசினார்.

இப்போது எல்லாம் வீடியோவாக எடுக்கிறார்கள். எனவே திரித்து செய்தி வெளியிடாதீர்கள். பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்ற எனது கருத்தை நான் இப்போது சொல்ல முடியாது. நான் முழுமையாக இன்னும் அரசியலில் இறங்கவில்லை. (ம்க்கும் இறங்கீட்டாலும்!) அன்றாட நிகழ்வுகளுக்கு நான் கருத்து கூற முடியாது. அதை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். இதே கேள்வி-பதிலை சொல்லி கொண்டிருந்தால் மக்கள் கடுப்பாகிவிடுவார்கள்.

10 பேர் எதிர்த்துக்கொண்டு ஒருவருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றால், யார் பலசாலி? அந்த 10 பேரா, அல்லது ஒருவரா? இதைவிட கிளியராக நான் எதையும் சொல்ல முடியாது? ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டுப்போனது என அமைச்சர் கூறியுள்ளார். அவர் பதவிக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். பதிலுக்கு நான் அதே போன்ற

கேள்வியை கேட்டால் நன்றாக இருக்காது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த தைரியம் பாஜக கொடுத்தது என்பது போல் முறைத்து காட்டினார்.

ரஜினிகாந்த் நடித்த ‘2.O’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ள நிலையில், சர்ச்சைகளை தவிர்க்க அவர் முற்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.O திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் போன்றோர் அறிவித்துள்ளார்களே என்ற கேள்விக்கு, அதை கர்நாடகா சர்க்கார் பார்த்துக்கும் என்று பதிலளித்து பிரஸ் மீட்டை முடித்துக்கொண்டார் ரஜினிகாந்த்.

திரைப்படங்களில் கோமாவில் உள்ள கதாநாயகனை மருத்துவர் சோதித்து விட்டு 24 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்லவும் முடியும் என்பது போல் நேற்றைய பேட்டியில் சொதப்பலாக பதில் அளித்துவிட்டு 24 மணி நேரம் கழித்து குருமூர்த்தி கதைவசனத்தில் இந்த பேட்டியை நடித்து காட்டியதாக போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்