ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஒரு பெரிய தேசத்தின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாகச் சொல்ல முடியாது. ஆனாலும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கு உள்ள ஒரு முக்கியத்துவம் என்னவென்றால், நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒட்டி இவை அமைந்திடவில்லை. பல்வேறு மூலைகளையும் தொட்டிருக்கின்றன. பெருமளவில் அந்தந்த மாநில விவகாரங்களே தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன என்றாலும், ஆழ்ந்து பார்க்கும்போது ஒரு விஷயம் துலக்கமாகப் புலப்படுகிறது. பாஜக மீதான மயக்கமெல்லாம் கலைந்துபோய் குறைந்தபட்ச நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். மறுபுறம் காங்கிரஸ் புத்துயிர் பெற்று எழுகிறது. மோடி அலை ஓய, ராகுல் அலை எழுகிறது.
கடுமையான போட்டிக்கு இடையில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியிருக்கிறது என்றாலும், இங்கே தேர்தல் ஆயுதங்களாக காங்கிரஸ் தேர்தெடுத்த உத்திகள் அதன் ஆதரவாளர்களுக்கு சந்தோஷம் அளிக்கக் கூடியவை அல்ல. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் கோசாலைகள், ஆன்மிகத்திற்காக தனித் துறை, மாநிலம் முழுவதும் சம்ஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் என்று காங்கிரஸ் குறிப்பிட்டிருக்கும் பல வாக்குறுதிகள் இந்துத்துவத்திலும் பாஜகவுக்குப் போட்டியாக அதை முன்னிறுத்துபவை. பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு.
மந்த்சவுரில் விவசாயிகள் மீது எப்போது சௌகான் அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதோ அப்போது அந்த அரசின் வீழ்ச்சி தொடங்கியது. கிராமப்புற மக்களிடையில், குறிப்பாக விவசாயிகள் இடையில் ராகுலின் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. மும்முறை முதல்வரான சௌகான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவருடைய பிம்பத்தை உடைத்தன. காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மூவரும் வேறுபாடுகளை மறந்து களம் இறங்கியது சூழலை மாற்றியது.
இருபதாண்டுகளாகவே ராஜஸ்தானில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இந்த முறையும் அதுவே தொடர்ந்திருக்கிறது என்றாலும் கட்சிக்கு வெளியில் மட்டும் அல்லாமல் கட்சிக்குள்ளும் அதிருப்தியை எதிர்கொண்டார் முதல்வர் வசுந்தரா. அமித் ஷாவுக்கும் வசுந்தராவுக்கும் இடையில் நிகழ்ந்த பனிப்போரும் சேர்ந்தே கட்சியை வீழ்த்தியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பும் வசுந்தராவைக் கைவிட்டது. எதிர்ப்புறத்திலோ காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய கோஷ்டி பூசல்களைக் கைவிட்டுவிட்டு கடுமையாக உழைத்தார்கள்.
விவசாயிகளின் அதிருப்தி பாஜகவின் தோல்விக்கு முக்கியமான காரணம். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் இரண்டும் ஏற்கெனவே இருந்த கிராமப்புறச் சூழலை மேலும் மோசமாக்கின. சாலைகள் விரிவாக்கப் பணிக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் அரசு காட்டிய கடுமையும் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசியது. ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற ராகுலின் பிரச்சாரம் விவசாயிகளின் நம்பிக்கைக்கு வித்திட்டது.
கண்ணுக்கெட்டிய தொலைவில் எதிரிகள் இல்லை என்ற சூழலில்தான் முன்கூட்டி தேர்தலுக்குத் தயாரானார் சந்திரசேகர ராவ். ஆனால், தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானா ஜன சமிதி என்று உருவான மகா கூட்டணி பெரும் சவாலாக உருவெடுத்தது. ஏனென்றால், கடந்த தேர்தலில் இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைக் கூட்டினால், 40.1%. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியோ 34% வாக்குகளையே பெற்றிருந்தது. ஆனால், மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயலாற்றும் ஆட்சியாளர்களை மக்கள் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதைத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.
ஆந்திராவில் பின்தங்கிய பிராந்தியமாக இருந்த தெலங்கானாவை வளர்ச்சி நோக்கி உந்தித் தள்ளிய சந்திரசேகர ராவின் சாதனைகள்தான் அவருடைய பிரதான ஆயுதம். தெலங்கானாவுக்கு என்று தனிவுணர்வையும் அவர் வளர்த்தெடுத்தார். தெலுங்கு தேசம் மகா கூட்டணியை அமைத்தபோது, “சந்திரபாபு நாயுடு தெலங்கானாவுக்கு எதிரானவர்” என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் சந்திரசேகர் ராவ்.
காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அஜீத் ஜோகி, “15 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் விரும்புவதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. பாஜக தோற்றதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியிருக்கிறார்.
பதினைந்து ஆண்டு கால ரமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி மீதான அதிருப்தியே காங்கிரஸின் வெற்றிக்குக் காரணம். சொல்லப்போனால், காங்கிரஸ் உட்பட யாரும் எதிர்பாராத முடிவு இது. ‘பரிவர்த்தன்’ என்று எல்லா இடங்களிலும் மாற்றத்திற்கான குரல் ஓங்கியொலித்தது. பாஜக மீதான அதிருப்தியை காங்கிரஸ் அறுவடை செய்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழ்வது மிசோரத்தின் வழக்கம்; இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் சொல்வதுபோல விஷயத்தை முடித்துக்கொள்வது எளிதானது அல்ல. ஐந்து முறை முதல்வரான லால்தன்ஹவ்லா சம்பை தெற்கு மற்றும் செர்ச்சீப் என்று போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதும் கடந்த முறை வென்றதில் ஆறில் ஒரு பங்கு வெற்றியைக்கூட காங்கிரஸ் பெற முடியாமல்போனதும் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவு.
மிசோரம் தேசிய முன்னணி அம்மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் முக்கியமான எதிர்க்கட்சி. பாஜகவுடன் கூட்டு வைத்திருந்த மிசோரம் தேசிய முன்னணி இந்தத் தேர்தலை தனியாகவே சந்தித்தது. வேலைவாய்ப்பின்மை வடகிழக்கு முழுவதுமே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மக்களின் முக்கியமான அதிருப்திக்கு இதுவே அடிப்படை.
இந்த தோல்விகள் ஒரு பொருட்டல்ல, இந்த முடிவுகள் அடுத்து வரும் தேர்தல்களில் பாஜக வாக்கு வங்கியை பாதிக்காது என தமிழிசை பேட்டி கொடுத்துள்ளார், 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அது பாஜகவிற்கு தோல்வியாக இருக்காது. பாஜக வெற்றி பெற்றால் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார்கள். இப்போது அவர்கள் வெற்றியடைந்துள்ளனர் அதற்கு என்ன சொல்லப்போகிறார்கள். என்று அந்தர் பல்டி அடித்தார்.
ஆனாலும், தமிழகத்தில் தாமரை மலராது. தங்கள் மீது வீசும் சேற்றை வாரி அதில் தாமரை மலரச் செய்வோம் என்றார். ‘வெற்றிகரமான தோல்வி’ என்றார். செயற்கை மழை பெய்யவைத்து மலரச் செய்வோம் என்றார். தலைகீழாக நின்று தண்ணி குடித்தும் பார்த்தார். தற்சமயம் வட மாநிலங்களில் நிகழ்ந்திருக்கும் தோல்வி ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற மரண அடி, எதிர்வரும் நாடாளுமன்ற பிரதமர் தேர்தலில் தமிழகத்தில் வாக்காளர்கள் எடுக்கப்போகும் முடிவு ஒர் போஸ்ட் மார்ட்டம், அதாவது பிரேத பரிசோதனை. என்கிறார் உங்கள் நியூஸ் செய்தி தளத்திற்கு ஓசி டீ குடிக்க வந்த தீவிர பாஜக கப்சா எதிர்ப்பாளர் ஒருவர்.