அமமுகவும், அதிமுகவும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றிக் கனியை பறிக்க அதிமுகவும் டிடிவியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்களும் பாஜகவும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க முடியாது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தெளிவாக கூறிவிட்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இந் நிலையில் தினகரனின் ஆதரவாளரும், அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்கத்தமிழ்ச்செல்வன் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார். திமுகவின் வெற்றியை தடுக்க கட்சிகள் இணைப்பு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரு கட்சிகளும் தற்போது இணைய வேண்டும்.

அப்போதுதான் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் முழுமையான வெற்றியை பெற முடியும். நான் கூறுவது தொண்டர்களின் கருத்து. தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பிரிந்துள்ள அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும். அதை தான் அனைத்து நிர்வாகிகளும் விரும்புகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கை தான் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் உறுதியான நிலைப்பாடு. அதோடு, கூடுதலாக சில அமைச்சர்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்று தான் டிடிவி தினகரன் கூறி வருகிறார்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தினகரனை தவிர யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என்று கூறுகின்றனர். எனவே யார் பதவியில் இருக்க வேண்டும், விலக வேண்டும் என்பதை பெருந்தன்மையுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். இரு தரப்பிலும் முழுமையாக உட்கார்ந்து பேசினால் கட்சிகள் இணைவது நிச்சயம் சாத்தியம்தான்.

ஏற்கனவே ஜெ.அணி, ஜானகி அணி என 2 பிரிவாக இருந்த போதுதான் திமுக ஆட்சியில் அமர்ந்தது. அந்த தவறை உணர்ந்து இரு அணிகளும் பின்னர் இணைந்து, ஆட்சியையும் பிடித்ததை மறந்துவிடக் கூடாது. அதே போன்ற ஒரு கால கட்டம்தான் இப்போது வந்துள்ளது.

கட்சியின் ‘நிரந்தர’ பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் உள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இல்லாமல் உள்ளனர். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை. அதிமுகவில் உள்ள சிலரின் சுய நலத்துக்காக கட்சியையும், ஆட்சியையும் இழக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும். அதிமுக, அமமுக இணைந்தால் மிகப்பெரிய பலம் கிடைக்கும். தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால் அதிமுகவுக்கு தோல்வி தான் கிடைக்கும்.

தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு, சின்னம்மாவை மானசீகமாக பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு வடநாட்டு தேர்தல்களில் தோல்வி முகத்தில் உள்ள மோடியை துறந்துவிட்டு, கிணற்று தவளைகளான ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் சின்னம்மா காலில் விழுந்து சரணாகதி அடைந்து இருக்கும் சொத்து பத்துக்களை காபந்து பண்ணிக் கொள்ள எண்ணி இருப்பதாக நம்பத்தகாத அதிமுக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.