தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. சில தினங்கள் முன்பாக சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய மணிகளை தொழிலதிபர் இல்லத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், யாருக்கும் தெரியாமல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், திரைமறைவிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஒருவழியாக இப்போது எல்லாம் முடிந்த நிலையில் இன்று அதிமுக – பாஜக கூட்டணியும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமித் ஷா சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக முரண்பட்ட தகவல்களும் வெளியாகி வந்தன. ஆனால் அமித் ஷா வரவே இல்லை. முன்னதாக, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், அதிமுகவிற்கு, மொத்தம் 25 தொகுதிகள் என்றும், பாஜகவிற்கு 8 தொகுதிகள் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில் பாஜகவுக்கு 5, பாமகவுக்கு 7+1 என அறிவிக்கப்பட்டு விட்டது.
நேற்றைய தினம், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்தது பாஜக. அமித்ஷா மும்பை சென்று, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மறு தினமே தமிழகத்திலும், தனது கூட்டணியை அறிவிக்க உள்ளது பாஜக. திமுக இன்னமும் தனது கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்காத நிலையில், பாஜக, அதிமுக கூட்டணி விஷயத்தில் துரிதம் காட்டியுள்ளது.
அதிமுகவுக்கு எதிராக அலை இருந்தாலும், சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள், நிதி உதவி திட்டங்கள் போன்றவை தங்கள் கூட்டணிக்கு வெற்றியைத் தேடி தரும் என்று நினைக்கிறது பாஜக. தேமுதிகவுடன் கூட்டணி இறுதியாகவில்லை என்பதால்தான் அமித் ஷா வருகை தள்ளிப் போயுள்ளதாக சொல்கிறார்கள்.
10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளதாக கூறினார்.
அந்த கோரிக்கைகள்:
01.காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்
02. தமிழகத்தின் 20 பாசன திட்டங்கள் மற்றும் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
03. இட ஒதுக்கீட்டை காக்க, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
04. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
05. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உடனடியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும்.
06. தமிழகத்தில் நீர்வளத்தை காக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்.
07. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
08. காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.
09. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும்.
10. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இது தவிர கப்சா நிருபரின் கண்டுபிடிப்பில் பதினோறாவது கோரிக்கையாக தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாக டாஸ்மாக் கடைகளில் மாங்காய் ‘சைட் டிஷ்’சாக கொடுக்கப்படும். அது சின்ன மாங்காவா பெரிய மாங்காவா? என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
தலைவர் ராமதாஸ் கூறிய ரகசிய அறிக்கையில் “என்னுடைய பழைய ட்வீட்டை எல்லாம் தேடாதீர்கள்.. மற்றவர்கள் இஷ்டப்படி கூட்டணி வைக்கணும்னா சோறு தின்ன முடியாது சுண்ணாம்பு தண்ணியை தான் கலக்கி குடிக்க வேண்டும். அமையவிருக்கும் கூட்டணியில் மோடி கல்வி – எடப்பாடி செல்வம் – ராமதாஸ் ஆகிய நான் வீரம் – ஆக முப்பெரும் மூதேவியராக விளங்குவோம்” என்றார்.