லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம், நேர்காணல் நடத்திய விஜயகாந்த், ‘சைகை’யில் கேள்வி எழுப்பியதால், கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை, கோயம்பேட்டில் உள்ள, கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு அளித்த, 300க்கும் மேற்பட்டோர், நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களை, ஒரே இடத்தில் மொத்தமாக அமரவைத்து, விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார்.’தேர்தலில் நின்றால், எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என, ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் துாக்கி, சில்லரையை சுண்டுவது போல செய்கை காட்டி, விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, விருப்பமனு அளித்தவர்கள் பதில் அளித்தனர். மற்றபடி, விஜயகாந்த், வாய் திறந்து எதுவும் பேசவில்லை. சிலரை பார்த்து, விஜயகாந்த் ஏதோ ஆர்வமுடன் பேச முயற்சித்தார். ஆனால், விஜயகாந்த் பேசியதை அவர்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை. இதனால், நேர்காணலில் பங்கேற்றகட்சியினர், அதிர்ச்சி அடைந்தனர்.

விருப்பமனு கட்டணமாக, பொதுத்தொகுதிக்கு பெறப்பட்ட, 25 ஆயிரம் ரூபாய்; தனித்தொகுதிக்கு பெறப்பட்ட, 10 ஆயிரம் ரூபாய், தேர்தல் செலவிற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக, நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அமெரிக்காவில், 60 நாட்கள் சிகிச்சை பெற்று, சில நாட்களுக்கு முன், சென்னை திரும்பினார்.

‘விஜயகாந்த் உடல்நலம் தேறி வருகிறார்; தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார்’ என, அவரது மனைவி, பிரேமலதா கூறி வருகிறார். ஆனால், நேற்று நடந்த நேர்காணலின் போது, விஜயகாந்தால் பேச முடியவில்லை; சைகை காட்டினார். இதை பார்க்கும்போது, விஜயகாந்த் பூரண உடல் நலம் தேறியதாக தெரியவில்லை. எனவே, தேர்தல் பிரசாரத்தில், அவர் ஈடுபட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

கோயம்படு பக்கம் விஜயகாந்த் அலுவலகத்தில் டீ கேன் கொண்டுவருபவர் போல் கப்சா நிருபர் புலனாய்ந்தார். அப்போது புரட்சி கலைஞர் பட்டம் வாங்கிய விஜயகாந்த் சினிமாக்களில் கோர்ட் சீன்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசி மக்களை துன்புறுத்தினார். எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார் பின்னர் சின்னாபின்னமாகி கட்சி சிதறி சின்னத்தையும் இழந்த கூத்து அரங்கேறியது நினைவிருக்கலாம். வாயை திறந்தால் கடைசி வாய்ப்பு பறிபோகும் என்பதால் பிரேமலதா சுதீஷ் இருவரும் விஜயகாந்த் பேச இயலாமல் ‘கோத்ரெஜ்’ பூட்டு வாங்கி வாய்ப்பூட்டு போட்டு நேர்காணலுக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது.

பகிர்