அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தரப்பு, இன்று முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வரும் லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத் தேர்தல்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தது.

ஆனால் பதிவு செய்யப்படாத அந்த கட்சிக்கு பொதுவான ஒரு சின்னமாக குக்கரை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும் மிகக் குறுகிய காலமே இருப்பதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாவிட்டாலும், பொதுவான ஒரு சின்னத்தை தினகரன் தரப்புக்கு ஒதுக்குவதுதான், ஆரோக்கியமான தேர்தல் களத்துக்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் தினகரன் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம், ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி தங்கள் வேட்பாளர்கள் அனைவருக்குமே பொதுவான ஒரு சின்னத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்கீடு செய்தேயாக வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு எதையும், பிறப்பிக்க விட்டாலும், பொது சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு, பரிந்துரை செய்தது.

இருப்பினும், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்ற பரிந்துரையை பின்பற்றும் என்று தெரிகிறது. எப்போது, சின்னம் ஒதுக்கப்படும் என்பதுதான் இன்னும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத்தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில் வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே இடைக்கால சின்னமாக தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள், அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இன்று இறுதி வாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடுகையில், இந்தியாவில் இதுபோன்ற பல குழுக்கள் இயங்குகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு குழுவிற்கு மட்டும் பொதுவான சின்னத்தை வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது இன்னும் கட்சியாக பதிவு செய்யப்படவில்லை. எனவே எங்களால் குக்கர் சின்னத்தையோ அல்லது வேறு ஒரு பொது சின்னத்தையோ ஒதுக்க முடியாது என்று தெரிவித்தனர். தினகரன் தரப்பில் வாதிடுகையில், இன்றைக்கே, வேண்டுமானாலும் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்து விடுகிறோம். எங்களுக்கு குக்கர் இல்லாவிட்டாலும், வேறு ஒரு பொது சின்னத்தையாவது ஒதுக்குங்கள் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் பதில் வாதத்தில், ஒரு கட்சி பதிவு செய்து குறைந்தது 30 நாட்களாவது ஆனால்தான், பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியும். எனவே இன்றே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்தாலும், எங்களால் குக்கர் உட்பட, எந்த ஒரு பொது சின்னத்தையும், ஒதுக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தினகரன் குழு தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று வாதிடுகிறது. ஆனால் அவர்கள் தங்கள் பேருந்தை தவற விட்டு விட்டனர். நிஜத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சின்னத்தை ஒதுக்கும்போது அது அந்த கட்சி அல்லது அந்தக் குழுவிற்கு தேர்தலில் பின்னடைவாக தான் அமையும் என்றார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் காலகட்டத்தை கருத்தில் கொண்டு ஒரு பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்குவதற்கு பரிசீலிக்கலாம். அப்போதுதான், தேர்தலில் சரியான போட்டி அமையும். களம் சமமாக இருக்க வேண்டும். தினகரன் தரப்பின் 59 வேட்பாளர்கள் சுயேச்சையாகவே கருதப்படுவார்கள். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

59 வேட்பாளர்கள் இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று ஒரு பொது சின்னத்தை தினகரன் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் தினகரன் அணியை சேர்ந்த 59 வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் ஒதுக்கப்பட்டாலும் அதை தேர்தல் நடைபெறும் கால கட்டத்திற்குள் பிரபலப்படுத்திவிடுவோம் என்று வெற்றிவேல் உள்ளிட்ட அவர் தரப்பு பிரமுகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

கட்சிபேருல உள்ளவங்க A1 குற்றவாளி, கட்சியோட பொது செயலாளர் கைதி, துணை பொது செயலாளர் ஜாமின் கைதி.. இந்த லட்சணத்தில் இரட்டை இலை சின்னம் வேண்டுமாம். சுயேச்சை அமைப்புக்கு பொது சின்னம் கொடுத்தால் , அது தவறான முன்னுதாரராணம் ‘ஆய்’ விடும். என அங்கலாய்த்தார் நமது கப்சா நிருபர். “அதிமுக தரப்புக்கு பிரஷர் கொடுக்க பிரஷர் ‘குக்கர்’ சின்னம் தான் தரவில்லை, தேர்தலில் வெற்றி பெற்று சங்கு ஊதி சமாதியில் பால் ஊற்ற பால் ‘குக்கர்’ சின்னமாவது தாருங்கள்” என தேர்தல் ஆணைய அதிகாரிகளின் காலை பிடித்து தினகரன் கெஞ்சியதாக அமமுக தரப்பில் வெளியான கப்சா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிர்