தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அனுமதி இல்லை.

சில வகையான நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட அரசு அனுமதி அளித்து வந்தது. ஓட்டல் உள்பட வணிக நோக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளுக்குமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி இல்லை.

இதனால் இரவு 10 மணி அல்லது 11 மணிக்கு மேல் உணவு கிடைக்காமல் சென்னை உள்பட பல நகரங்களில் மக்கள் தவித்து வருகிறார்கள். இதேபோல் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகள் எதற்கும் மக்கள் வெளியில் சென்று வாங்க முடியாத நிலையில் இருந்தனர்.

இது தொடர்பாக வணிகர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எனவே இனிமேல் 10 மணிஆச்சு கடையை பூட்டு என்று எந்த கடையிலும் வந்து போலீசார் தொந்தரவு செய்ய வாய்ப்பு இல்லை. இதேபோல் மக்களும் 10 மணி அல்ல 11 மணி, 12 மணி என்றாலும் வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்யலாம். இதேபோல் எந்த நேரமாக இருந்தாலும் விரும்பிய வகையில், உணவுகளை வாங்கி சாப்பிடலாம்.

இதற்கான தடைகள் விலக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்காகவே இரவு நேரங்களில் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. இனி யார் வேண்டுமானாலும் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக வந்து செல்ல வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில் திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. இதனால் எந்த பரபரப்புமின்றி, ரசிகர்கள் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் தியேட்டருக்கு செல்லலாம்.

இது டாஸ்மாக்கு கடைக்கு வழங்கப்பட்ட மறைமுக ஆணையே. டாஸ்மாக்குக்கு மட்டும் 24 மணி நேரம் என்றல் ‘குடிமக்களாகிய’ நாம் கொந்தளித்து விடுவோம் அல்லவா? அதனால் தொட்டுக்கொள்ள சைடு டிஷ் சால்னா, கொத்துபுரோட்டா, டபுள் ஆம்லேட், சிகரெட் போன்றவை கிடைக்காமல் குடிமகன்கள் அல்லாடக் கூடாது என இந்த அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை மதுப்பழக்கத்திற்கு அழைத்து செல்லும் வழிமுறை இது, இதனால் சினிமா மோகமும் அதிகரிக்கும். இதனால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. எது எப்படியோ தமிழக அரசுக்கு மேலும் வருவாய் வரப்போகிறது அப்போ இனி டாஸ் மார்க் 24 மணி நேரமும் திறந்து இருக்கும், அப்படி இருந்தால் தமிழக அரசுக்கு மேலும் லாபம் தான். பாவம் ஒட்டு போட்ட மக்கள் இனி எப்போ வேண்டும் என்றாலும் குடிக்கலாம். குடித்தே சாகலாம். பெண்கள் தாலிக்கு முதல் வேட்டை தான். இரவு போலீஸ் ஒருவர் “அப்பாடா எங்க வயித்துல பால வாத்திங்க, இனி கல்லா கட்டலாம்” என்றார்.

பகிர்