காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார். முதல் நாள் முதலே ஏராளமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். ஆனால் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.
வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு நலன் கருதி வார இறுதியில், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் இவர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இதனை முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசித்து செல்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தாலும், வைபவத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தலைவலியாக மாறியுள்ளது.
கடந்த ஜூலை மூன்றாம் தேதி அன்று ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அத்துடன் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதாலேயே அவர் இறந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அதை மறுத்திவிட்டார்.
நேற்றைய தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு அறிவித்தார். இந்நிலையில் மேலும் ஒருவர் அத்தி வரதர் வைபவத்தில் உயிரிழந்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த வயதான முதியவர் ஆறுமுகம் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இதனால் இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அத்திவரதர் தரிசனத்திற்கு, பொது மக்களுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலர் சண்முகம் கூறியுள்ளார். காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில், நடக்கும் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோவிலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் தலைமை செயலர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் கூடாரம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அத்திவரதரை, நோயாளிகள், முதியவர்கள், தரிசிக்க பேட்டரி கார்களை முறையாக பராமரிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளோம்.
பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் அமைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் கூடுதலாக பிஸ்கட், தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். வரிசையில் நிற்போர்கள் ஓய்வெடுக்க நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும் எனக்கூறியுள்ளோம்.
முக்கிய நாட்களில், அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகாலை 4 மணிக்கு துவங்குவது குறித்து பரிசீலனை நடக்கிறது. விஐபி தரிசனம் பொது மக்கள் பாதிக்காத வகையில் செய்யப்படும்.
வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு கோபுர பகுதியில், மருத்துவ முகாம் நடத்தப்படும். வெளிமாவட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
டிஜிபி திரிபாதி கூறுகையில், அத்திவரதர் உற்சவத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைகுறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவிக்கு கூடுதலாக தன்னார்வலர்களை அழைத்துள்ளோம் என்றார்.
இதற்கிடையே கொதிப்படைந்த பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவில் சொம்பு தூக்கும் கணிசமானவர்களுக்கு (வைகுண்ட) பதவி அளிப்பதாக கூறி இருக்கும் நிலையில் யாரைக் கேட்டு கலெக்டர் கர்ப்பிணிகள் முதியோர் வரக்கூடாது என அறிக்கை விட்டார் என சீறியதாக தெரிகிறது.